பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308- திருவாசகம் சில சிந்தனைகள்-5 நடைபெறவேண்டிய ஒரு செயல் என்பதை அறிதல் வேண்டும். அப்படியானால் அத்தனை மாதங்கள் அடிகளார் திருப்பெருந்துறையிலேயே தங்கிவிட்டாரா என்பது சிந்தித்தற்குரியது. மண் ஒட்டையும் செம்பொன்னையும் ஒன்றாகவே காணும் நிலையை அடிகளார் அடைந்துவிட்டார். திருவடி தீட்சை கிடைத்தபின் உண்டான முதற்பயன் இது. இந்த நிலையை அடைந்துவிட்ட அடிகளார் பொன்னை வைத்துக் கொண்டு பணியாளர்களுக்குக் கூலி கொடுத்துப் பல மாதங்களுக்குக் கோயில் கட்டினார் என்றால், அது சற்றும் பொருந்தாக் கூற்றேயாகும். இத்தகைய பணியில் ஈடுபடும் மனநிலை, திருவடி தீட்சை பெற்ற அந்தக் கணத்தில், அடிகளாரை விட்டு எங்கோ போய்விட்டது. எனை நான் என்பது அறியாமல், பகல் இரவாவதும் அறியாமல் வாழத் தொடங்கிய அடிகளார், பொன் மூட்டையை வைத்துக்கொண்டு, கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார் என்று கூறுவது, இறையனுபவம் பற்றி அறியாதவரின் கூற்றேயாகும். அப்படியானால் இந்தத் திருப்பெருந்துறையில் ஈடு இணையற்ற பொலிவுடன் விளங்கும் திருக்கோயிலைக் கட்டியது யார்? இங்குள்ள திருக்கோயிலில் கருவறையில் சிவலிங்கம் இல்லை. அதற்குப் பதிலாக முக்கால் அடி உயரமுள்ள ஒருமேடைதான் இருக்கின்றது. குருந்த மரத்தடியில் இருந்த குருநாதரைச் சிவபெருமான் என்றே அடிகளார் கருதிப் பாடினார். அந்தக் குருநாதர் மறைந்துவிட்டதை அறிவிக்குமுகமாகவே இலிங்கத் திருமேனி நிறுவப்படாமல் வெறும் பீடம்மட்டும் உள்ளது என்று விளக்கம் கூறப்படுகிறது. இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், இந்தக் கோயிலை அடிகளாரே கட்டினார் என்று கூறுவதில்தான் பிரச்சினை தோன்றுகிறது. அடிகளார் வரலாற்றை