பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316-திருவாசகம் சில சிந்தனைகள் 5 வந்துவிடுவான். இதனையே கம்பநாடன் வாராதே வரவல்லாய் (கம்ப:2570) என்று பேசுகிறான். அதாவது, வருதலாகிய (புடைபெயர்தலாகிய) செயல் நடைபெறவில்லை. ஆனால், வந்துவிட்டான். இதன் எதிராக வந்தாய் போல வாராதாய்' (நம்.திருவாய்:6-10-9) என்றும் பெரியோர் கூறுவர். இங்கே புடைபெயர்ச்சிச் செயலில்லாமலும் இறைவன் வந்ததுபோலப் பக்தன் உணர்ந்தான்; ஆனால் உண்மையில் அவன் வரவில்லை. அடிகளார் புகுந்து என்று சொல்வதற்கு முன்னர், உள்ளேயும் அவன் இருந்தான், வெளியேயும் அவன் இருந்தான். வெளியே இருந்த அவன், உள்ளே புகுந்ததை அடிகளார் உணர்ந்தார். ஆனால் என்ன அதிசயம்! புகுந்தது என்னவோ உண்மை. ஆனால் புறத்தே நின்று கொண்டிருந்தானே அவன் இப்போதும் அங்கே நின்று கொண்டுதான் இருக்கிறான். வாராதே வரவல்லாய் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் இது. இந்த நுணுக்கத்தை உபநிடதம் பின்வருமாறு பேசுகிறது. இது பூரணம்; அது பூரணம்; அந்தப் பூரணத்திலிருந்து இந்தப் பூரணம் வந்தது; என்ன அதிசயம். இதுவும் பூரணம் அதுவும் பூரணம்’ அடுத்து வரும் 'ஆண்டான்' என்ற சொல் இறைவனைக் குறிப்பதாகும். புகுந்து என்ற சொல்லுடன் 'ஆண்டான் சேர்ந்து வரும்பொழுது புகுந்த பிறகுதான் ஆண்டானா, ஆட்கொண்டபின் புகுந்தானா’ என்ற முறையில் ஐயங்கள் தோன்றுகின்றன. உண்மையில் இவை இரண்டும் ஒருங்கே நிகழ்கின்ற இரண்டு செயல்களாகும். ஆள்வதற்குப் புகவேண்டிய தேவையில்லை. சிவபுரத்தில் இருந்தேகூட அடிகளார் போன்ற ஆன்மாக்களை ஆண்டுகொள்ள முடியும். புகுந்து என்ற எச்சம் ஆண்டான்' என்ற வினை கொண்டு முடிவதாக நினைத்து, புகுதலாகிய செயல் முன்னரும் ஆளுதலாகிய