பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320-திருவாசகம் சில சிந்தனைகள்-5 பசி, தாகம், பாலுணர்வு என்பவை உரைக்குள் அடங்குமேனும் அவற்றிலும் ஒரு வேறுபாடுண்டு. பசி, தாகம் என்பவை இத்தகையது என்று எடுத்துக்கூறும் உரைக்கடங்கியதாகும். பாலுணர்வு என்பது அவ்வளவு எளிதாக உரைக்குள் அடங்காவிடினும், 'நான் அனுபவிக்கிறேன்’ என்ற உரைக்குள் ஓரளவு அடங்கிவிடுதலின் அதனையும் உரை உணர்வு’ என்ற தொகுதியில் அடக்கிவிடலாம். இனி இரண்டாவதாக உள்ளது இந்த நிலையைக் கடந்து இறந்து நிற்கின்ற ஒர் உணர்வாகும். இதனை நிற்கின்ற உணர்வு என்று அடைகொடுத்துக் கூறியமையால் முதலில் கூறப்பெற்றது நிலையில்லாதது என்பது பெறப்படும். இந்த உணர்வு நிலையானது என்பதைத் தவிர இதனைப்பற்றி வேறு ஒன்றும் சொல்ல இயலாது. இது சொல்லுக்குள் அடங்காதது. ஆதலால் 'உரை இறந்த உணர்வு’ என்றும் நிலைபேறுடையது ஆதலின் நின்றதோர் உணர்வு’ என்றும் இதனைக் குறித்தார் அடிகளார். இந்த இரண்டாவது நிலையிலும் நான் ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. நான்', உணர்வு’, ‘உணரப்படும் பொருள் என்ற மூன்றும் இந்த இரண்டாவது உணர்வில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த உணர்வு முதிரமுதிர, மெள்ள மெள்ள நானும் உணரப்படும் பொருளும் உணர்விற்குள் ஐக்கியமாகி விடுகின்றன. முழுவதுமாக இவை ஐக்கியமாகின்றவரையில் இந்த உணர்வை இரண்டாவது நிலை உணர்வு என்றே சொல்லவேண்டும். முழுவதும் ஐக்கியமாகின்றவரையில் இந்த நானும் உணரப்படும் பொருளும் அவற்றின் தலையை வெளியே நீட்டிக்கொண்டுதான் இருக்கும். இதனை விளங்கிக் கொள்வது கடினம்.