பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 327 மரத்தடியில் குருநாதர் வடிவில் இருந்த ஒருவர் திடீரென்று அந்த வடிவை மறைத்துக்கொண்டு அந்தணனாவதும் காட்டினான் என்றும் பொருள் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது. ஆவதும் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதால் முன்னர்க் குருநாதராகக் காட்சியளித்தவர் பின்னர் அந்தணனாகிக் காட்சி தந்தார் என்று கொள்வதற்கும் இடமுண்டு. எட்டாம் திருமுறையா? அடிகளாருடைய திருவாசகம் எட்டாம் திருமுறையென்று பலராலும் பேசப்பெறுகிறது. மூவர் முதலிகள் அருளிய தேவாரங்களை ஏழு திருமுறைகளாக யார் பிரித்தார்கள் என்று தெரியவில்லை. தேவாரங்கள் சிதம்பரத்தில் ஏதோ ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன என்றும் முதலாம் இராஜராஜன் அதனை வெளிக்கொணர்ந்து, நம்பியாண்டார் நம்பி என்ற சிவ வேதியரைக் கொண்டு ஏழு திருமுறைகளாகத் தொகுத்தான் என்றும் திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அறிவுக்கோ ஆராய்ச்சிக்கோ தமிழ் இலக்கிய வரலாற்றிற்கோ ஒரு சிறிதும் பொருந்தாத இந்தக் கட்டுக்கதை, திருமுறை கண்ட புராணம் என்ற பெயரில் உள்ளது. இது யாரோ ஒருவரால் இயற்றப்பெற்று, உமாபதிசிவம் அருளியது என்ற ஒரு தொடரையும் தாங்கி நிற்கிறது. உமாபதி சிவத்திற்கும், திருமுறை கண்ட புராணத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் கூறவேண்டுமேயானால், நம்பியாண்டார் நம்பிக்கும் திருமுறைத் தொகுப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. முதலாம் இராஜராஜன் காலத்தில்தான் திருமுறைகள் தொகுக்கப்பெற்றன என்பதும் அவற்றைக் கோயில்களில் பாடுவதற்கு அவன்தான் முதன்முதலில் ஏற்பாடு செய்தான் என்பதும் அத்தைப்பாட்டிக் கதையேயாகும்.