பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330-திருவாசகம் சில சிந்தனைகள்-5 திருவாசகத்திற்கும் பத்தாவது இடத்தைத் திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகியவற்றுக்கும் அல்லவா தந்திருக்க வேண்டும்! இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்தால் எந்த அடிப்படையிலும் இல்லாமல் யாரோ சிலர் எட்டு, ஒன்பது, பத்து என்ற கண்க்கைத் தந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்குத்தான் வரவேண்டியுள்ளது. திருமுறைகள் தொகுக்கப்பெற்ற காலத்தில் காரைக்காலம்மையாரின் திருவாலங்காட்டுத் திருப்பதிகம், இரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய நூல்கள் கிடைத்திலதுபோலும், பதினோராம் நூற்றாண்டுவாக்கில் இவை கிடைத்திருக்கலாம். இசையோடு பாடப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள் போலவே மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்மையார் திருவாலங்காடுபற்றி இரண்டு திருப்பதிகங்கள் பாடியுள்ளார். தேவாரத் திருப்பதிங்களுக்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னர்த் தோன்றிய இந்த இரண்டு பதிகங்களும் தேவாரப் பதிகங்கட்கு முன்னோடியாகும். எனவே, இதனைக் கண்டெடுத்த பெரியவர்கள் இந்த இரண்டு பதிகங்களுக்கும் இந்த முறைவைப்பில் இடமில்லையாதலால் மூத்த திருப்பதிகம் என்ற பெயரைச் குட்டி, அம்மையாரின் ஏனைய பாடல்களோடு இதனையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க முனைந்தனர் போலும். அதே காலகட்டத்தில் சேரமான்பெருமான் நாயனாருடைய திருக்கைலாய ஞான உலாவும் பொன் வண்ணத் தந்தாதியும் திருவாரூர் மும்மணிக் கோவையும் கிடைத்திருக்க வேண்டும். அவற்றையும் இத்தொகுப்பினுள் சேர்த்தனர். இவற்றைமட்டும் தனியே ஒரு திருமுறை என்று சொன்னால்,அது அளவால் மிகமிகச் சிறியதாக இருந்துவிட்டிருக்கும். இந்த நிலையில் பதினோராம் திருமுறை என்று பெயரிடாமல் இவற்றைத் தனியே தொகுத்து வைத்திருக்க வேண்டும்.