பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 337 காரைக்கால் அம்மையார் தொடங்கிச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்வரையுள்ள ஆறுநூறு ஆண்டுகளில் இந்த அடிப்படையும் கட்டுக்கோப்பும் கலையாமல் இருந்ததால் தேவாரப்பண்கள் உதயமாயின. அம்மையாருக்குப் பிறகு களப்பிரர் இடையீட்டால் (கி.பி. 250 முதல் 500 வரை) தமிழில் எவ்வகை நூலோ பாடல்களோ தோன்றியதாகத் தெரியவில்லை. மறுபடியும் நாவரசர் காலத்தில்தான் (ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி) பண்முறையில் பாடும் பழக்கம் மீண்டும் தொடங்குகிறது. தேவாரப் பண்களில் இறைவனுடைய பெருமைகள் அடியார்பொருட்டு அவன் நிகழ்த்திய செயல்கள் என்பவை ஒருபுறமிருக்க, இந்த அடியார்கள் தம் குறைகளை வரிசைப்படுத்தி அவற்றைப் போக்குமாறு அவனை வேண்டும் பகுதியே எஞ்சிய இடத்தை ஏற்றுக்கொண்டது. மணிவாசகர் காலத்தில் இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டுவிட்டது. குரு வடிவில் இறைவன் வந்து ஆட்கொள்கிறான் என்ற புதிய சிந்தனை திருமூலர் காலத்திலிருந்து தொடங்கியதே யாகும். தேவர்கள்கூடப் புவனியில் சேவடி தீண்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை வலுவாக இருந்த காலத்தில், குருந்த மரத்தடியில் இருந்த குருநாதரைச் சிவனே என்று தாம் முடிவு செய்ததாக, புவனியில் சேவடி தீண்டினான் காண்க, சிவனென யானும் தேறினன் காண்க. (3.61-62) என்ற அடிகளில் அடிகளாரே பேசுகிறார். குருந்த மரத்தடியில் மானிட வடிவிலிருந்த குருநாதர் திருவாதவூரரை ஏற்றுக்கொண்டு மணிவாசகராக மாற்றி அருள்கிறார். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி மணிவாசகருக்கு முன்னோ பின்னோ நடந்தது என்று சொல்வதற்கு இலக்கியச் சான்றுகள் எதுவுமில்லை. சுந்தரருடைய திருமணத்தைத் தடுத்து ஒலைகாட்டி ஆட்கொண்ட இறைவன், மானுட வடிவு தாங்கி வந்து