பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338-திருவாசகம் சில சிந்தனைகள்-5 வழக்குரைத்து, சுந்தரரை அடிமை கொண்டானேனும் அந்தக் கிழவேதியரைக் குரு என்று சுந்தரர் கருதவோ மதிக்கவோ இல்லை. பெரிய புராணத்தில் வரும் ஒரு சில அடியவர்களெதிரே இறைவன், மானுட வடிவில் தோன்றிப் பல அருட்செயல்களைச் செய்தானேனும், அப்படித் தோன்றியவனை இந்த அடியார்கள் குருவாகச் சிந்திக்கவும் இல்லை; கொள்ளவும் இல்லை; அடியார் வேடத்தையும் அடியார்களையும் சிவனெனவே இவர்கள் கருதியமையின் குரு என்று சிந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகவேயில்லை. பெரிய புராண அடியார்களுள் சுந்தரர், நாவரசர் ஆகிய இருவர் தவிர வேறு யாருக்கும் இறைவன் திருவடி தீட்சை செய்ததாக வரலாறு இல்லை. ஒருமுறைக்கு மேலாகப் பலமுறை சுந்தரர் திருமுடிமேல் இறைவனது திருவடி பட்டாலும் இறுதிவரையில் சுந்தரர் இது யாருடைய திருவடியென்று அவராகவே தெரிந்து கொள்ளவில்லை. - இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மணிவாசகப் பெருமானின் வாழ்க்கை முறை, அருள்பெற்ற முறை, திருவடி தீட்சை பெற்ற முறை என்பவை முற்றிலும் புதுமையாகவே உள்ளன. குருநாதர் ஆசனத்தில் அமர்ந்து தம் திருவடிகளை நிலத்தில் ஊன்றிக்கொண்டு அமர்ந்திருந் தாராக, இதனைக் கண்டவுடன் இவர் மானுடரல்லர்; இறைவனே இவ்வாறு எழுந்தருளியுள்ளான் என்று கண்டு கொண்டதாக அடிகளாரே பாடியுள்ளார். புவனியில் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானும் தேறினன் காண்க. (3-61,62) என்று பாடக்கூடிய சிறப்பு, தமிழ்நாட்டு அடியார்கள் வரலாற்றில் அடிகளார் ஒருவருக்கே அமைந்திருந்தது என்று கூறினால் அதில் வியப்பொன்றும் இல்லை.