பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_347 மேலே கூறியவற்றைப் பெருமளவு பெற்றிராத கடவுண் மாமுனிவர் பாடிய திருவாதவூரடிகள் புராணம் நம்முடைய ஆராய்ச்சிக்கு எவ்விதத்திலும் பயன்படாது. இவற்றையெல்லாம் மனத்திற் கொண்டு பார்க்கும்பொழுது இன்றுள்ள பதிப்புகளில் மிகுதியாகக் காணப்பெறும் "தில்லையில் அருளியது என்ற குறிப்பு நம் குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. இப்பதிப்புகளின்படி பார்த்தால் பாதிப் பதிகங்கள் தில்லையில் அருளியனவாகவே கொள்ள நேரிடும். எங்கே அருளப்பெற்றது என்ற வினாவிற்குச் சரியான விடையின்றி அப்படியே நின்றுவிடுகிறது. அடுத்துக் காணப்பெறுவது பதிகத் தலைப்புகளாகும். நான்கு அகவல்கள், குயில்பத்து, கோத்தும்பி, அம்மானை, பொற்சுண்ணம், பூவல்லி போன்ற பகுதிகளுக்குத் தலைப்பிடுவது எளிதானதே ஆகும். அந்தப் அந்தப் பதிகங்களில் இத்தலைப்புகள் இடம் பெற்றிருத்தலின் தலைப்பிடுவது எளிதாகிவிட்டது. ஆனால், இத்தகைய முத்திரைகள் இல்லாத பல பகுதிகள் உண்டு. அவற்றிற்குத் தலைப்பிடுவது அவ்வளவு எளிதன்று. அம்மாதிரி இடங்களில் ஏதோ ஒரு பெயரை இட்டு, அது திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளது என்ற காரணத்தால் ஒரு 'திருவையும் சேர்த்துவிட்டனர். எல்லாவற்றிற்கும் 'திருவைச் சேர்க்கவேண்டுமென்று இடைக்காலத்தில் ஒருசிலர் கருதியிருக்க வேண்டும். அதன் பயனாகக் கூடுமானவரை, முடிந்த இடங்களில் எல்லாம் 'திருவைச் சேர்த்தனர். பல சந்தர்ப்பங்களில் இந்தத் திரு' பொருத்தமற்றதாகவும் சில இடங்களில் நகைப்பைத் தருவதாகவும் அமைந்திருக்கிறது. திருப்பொற்சுண்ணம், திருஅம்மானை, திருத்தெள்ளேணம், திருத்தோணோக்கம், திருக்கோத்தும்பி, திருவெண்பா, திருஏசறவு, திருவுந்தியார் என்பன போன்ற இடங்களில் திருவைச் சேர்த்தது எவ்வளவு பொருத்தமற்றது என்பது தெரியவரும்.