பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_349 பதிகத்தின் முதற்பாடலில் வரும் ஒரு தொடரைத் தலைப்பாகத் தந்திருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் ஒருசிறிதும் பொருத்தமில்லாத திருப்புலம்பல் போன்ற தலைப்புகள் தோன்றியிரா. இறையருள் பெற்று எல்லை யில்லாத மனத் திடத்துடன் நிமிர்ந்து நின்று உற்றாரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன்’ (558) என்று பாடும் பகுதிக்குத் திருப்புலம்பல் எனப் பெயரிட்டது எவ்வளவு பொருத்தமற்றது என்பதை அறியலாம். பதிகத் தலைப்புகள் நிலைமை இவ்வாறாக, ஒவ்வொரு பதிகத்திற்கும் ஓர் உட்தலைப்பை யாரோ சிலர் தந்துள்ளனர். இதுவும் இடைக்காலத்திலேயே நடைபெற்றிருக்க வேண்டும். இடைக்காலத்தில் தோன்றிய வேதாந்த சித்தாந்தத் தத்துவங்களை அறிந்தவர்க்கு 'ஆத்ம இலக்கணம்', 'ஆத்தும சுத்தி’, 'சிவனோடைக்கியம்', 'சிவனோடடைவு', ‘மாயாவிசய நீங்குதல்’, 'பிரபஞ்ச சுத்தி’, ‘அருட்சுத்தி’, "ஆத்தும பூரணம்’ என்பன போன்ற தொடர்கள் நன்கு பழக்கப்பட்டவை. திருவாசகப் பாடல்களுக்கு ஒரு சிறிதும் பொருத்தமில்லாமல் ஒரு காத தூரத்திற்கும் அப்பால் நிற்க வேண்டியவைகளாகும் இவை. ஒரு சிறிதும் பொருத்தமில்லாமல், மேலே கண்ட தொடர்களைத் திருவாசகத்தில் உட்தலைப்புகளாக இடைக் காலத்தார் எழுதியுள்ளனர், பிற்கால உரையாசிரியர்கள் இத்தலைப்புகளுக்கு விளக்கமும் கூற முயன்றுள்ளனர்! திருவாசகத்தின் சில பதிப்புகளையும் இந்த நூலையும் ஒருசேரப் பார்க்கின்றவர்களுக்குக் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக இத்தலைப்புக்களையும் உள்ளே அச்சிட்டுள்ளோம். அந்த அந்தப் பதிகத்தின் முன்னுரையில் இத்தலைப்புக்களின் பொருத்தமின்மை எத்தகையது என்பதை விளக்கியுள்ளோம். பதிகங்கட்குப் பெயரிட்ட சூழ்நிலையையும் உட்தலைப்புக்கள் தந்த இடைக்காலத்தார் ஆவலையும் இதுவரை விளக்கியுள்ளோம்.