பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து--21 இப்பாடலின் முதலிரண்டு அடிகளில் மனிதர்கள் இயல்பாக அகப்பட்டுக்கொள்ளும் இரண்டு பெரும் சுழல்கள் பேசப்பெறுகின்றன. முதலாவது சுழல் மண்ணிடை வாழ்வெனும் ஆழி' யின் சுழல்; இரண்டாவது தையலார் என்னும் சுழல். இவை இரண்டையும் சுழல் என்று உருவகித்ததற்கு ஏற்ப, அதில் அகப்பட்டவர்கள் தலைதடுமாறுவர் என்ற அனுபவ உண்மையைப் பேசுகிறார். நீர்ச்சுழலில் அகப்பட்டவர், மேல் எது, கீழ் எது, பக்கப் பகுதி எது என்று அறிந்துகொள்ள முடியாமல் அதிலேயே சுழன்று உயிரை விடுவர். சுழலிடைப் பட்டவர்களைக் காக்கவேண்டுமே யானால் அவர்கள் தலையையோ காலையோ எட்ட இருந்து பிடித்துக்கொள்ள வேண்டும். அதனால் சுழலில் விழுந்தவர் தலைதடுமாறுகின்ற நிலை தடுக்கப்படும். அதன்பிறகு அவர்களை வெளியே இழுப்பது எளிது. இந்த அனுபவ உண்மையை நன்கு அறிந்திருந்த அடிகளார், இப்பாடலில் மிக அற்புதமாக இதனை வெளியிடுகின்றார். "சுழித்தலைப்பட்டு நான் தலைதடுமாறாமே, பொய்யெலாம் விடத் திருவருள் தந்து தன் பொன்னடி இணை காட்டி, மெய்யனாய் வெளி காட்டி (என்) முன் நின்றது ஓர் அற்புதம் என்றவாறு கொண்டுகூட்டுச் செய்துகொண்டால் பொருள் எளிதாக விளங்கும். இதே அடிப்படையில் தையலார் சுழலில்பட்டுத் தலைதடுமாறும் அடிகளாரைப் பெருந்துறை நாயகன், குருநாதர் வடிவில் வந்து திருவருள் தந்ததன் மூலம் தலை தடுமாற்றத்தை நிறுத்தினான். அடுத்து என்ன செய்தான் தெரியுமா? உடன்பிறந்த பொய்யை அகலுமாறு செய்தான்.