பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360-திருவாசகம் சில சிந்தனைகள்-5 அடைப்பதன் நோக்கமென்ன என்ற வினாத் தோன்றுவது சரியே. அடிகளாருக்கு இறையனுபவத்திலிருந்து மீண்டவுடன் முதலில் தோன்றியது அதிர்ச்சி என்று கூறினோம். அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடே நீத்தல் விண்ணப்பம் என்று கூறினோம். நீத்தல் விண்ணப்பத்தை அடுத்து மதுரைத் திருவிளையாடல்கள் நடைபெறுகின்றவரையில் கலங்கிய நிலையிலேயே அடிகளார் இருந்திருக்க வேண்டும். தம் சிறுமை கண்டும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இறைவன் தம்மை ஆண்டுகொண்டான் என்ற நினைவு தோன்றியவுடன் தராதரம் பாராமல் பிற உயிர்களையும் அவன் ஆண்டுகொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் அவர் மனத்திடைத் தோன்றுகின்றன. அதுவே கீர்த்தித் திருஅகவலாக வெளிப்படுகின்றது. அவன் கருணையை வெளிப்படுத்தும் பல கதைகள் கீர்த்தித் திருஅகவலின் முற்பகுதியில் இடம் பெறுகின்றன. மானுட வடிவில் தமக்கு அருள் செய்த குருநாதர், மூலப் பரம்பொருளே என்பதை எளிதில் அறிந்து கொண்ட அடிகளார் பலருக்கும் பல இடங்களில் வெளிப்படாமல் தன்னை ஒளித்துக் கொண்டவன், திருப்பெருந்துறையில் தமக்கு எதிரே வெளிப்பட்டுக் காட்சி தந்தான் என்ற கருத்தை ஒளிக்கும் சோரனைக் கண்டனம் (3-14) என்ற தொடரால் திரு அண்டப் பகுதியில் பேசுகிறார். இதனால் இறைவன் பெருமை பேசுதல் என்ற தலைப்பில் திரு அண்டப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒளிக்குஞ் சோரனைத் திருப்பெருந்துறையில் கண்டு விட்டதால் அடிகளாரின் பொறிபுலன்களில் ஏற்பட்ட மாற்றம் அளவிடற்கரியது. சுருங்கக் கூறின் காணாதன வெல்லாம் காணும் வாய்ப்பும் கேளாதனவற்றையெல்லாம் கேட்கும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டிவிட்டன. கருணையுடையவன், எளிவந்த தன்மையுடையவன் என்று