பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362-திருவாசகம் சில சிந்தனைகள்-5 கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தது. இழுத்தவுடன் என்ன ஆயிற்று அந்த இரும்பு தரு மனம் உருகிற்று. அதுமட்டுமா உருகிற்று? அந்த மனம் குடிகொண்டுள்ள உடலின் எலும்புகள்கூட உருகிற்று. இப்படி உருகியதன் விளைவாக மணிவாசகர் என்ன கண்டார்? கரும்புதரு சுவையல்லவா கண்டதாகச் சொல்கிறார்? அப்படிக் கரும்புதரு சுவையாக இன்பம் தந்தது எது தெரியுமா? குருநாதரின் கழலிணைகள். கழலிணைகள் மூலம் கரும்பு தரு சுவையைத் தமக்குத் தந்தான் என்றால், இரும்புதரு மனத்தைக் கனிவித்தான் என்றால், எலும்பை உருக்கினான் என்றால், அவனுக்கு தாம் என்ன செய்ய வேண்டும் என்ற வினாவிற்கு விடைகூறும் முகமாக போற்றித் திருஅகவலைப் பாடுகிறார். இந்த முறையில் முறைவைப்புப் செய்வதன்மூலம் தொடர்ந்துவரும் ஒரு காட்சி கிட்டுகிறதல்லவா? அதனால்தான் இந்த மூன்றாவது தொகுப்பில் கீர்த்தித் திருஅகவலை முதலாவதாகவும், அண்டப்பகுதியை இரண்டாவதாகவும், திரு ஏசறவை மூன்றாவதாகவும், போற்றித் திருஅகவலை நான்காவதாகவும் அமைத்துள்ளோம். IV. உறுதிப்பாடு உணர்த்தல் நான்காவதாக உள்ளது உறுதிப்பாடு உணர்த்தல் என்ற தலைப்பாகும். இதனுள் எட்டுப் பதிகங்கள் இடம்பெறுகின்றன. 1. திருச்சதகம் (5) 2. திருப்பாண்டிப் பதிகம் (36) 3. குலாப் பத்து (40) 4. திருவார்த்தை (43) 5. உயிருண்ணிப் பத்து (34)