பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366- திருவாசகம் சில சிந்தனைகள் 5 என்பதை இவரைப் போலவே தெரிந்து கொண்டவர்கள் இவர்கள் தெரிந்துகொண்டாலும் இவர்கள் அதனை யாரிடமும் வெளிப்படுத்திப் பேசுவதில்லை. ஏனையோர் இவர்களை இனங்கண்டுகொள்வதும் கடினம். ஆனால், அடிகளார் இந்த இனத்தைச் சேர்ந்தவர் ஆதலால் இவர்களை இனங்கண்டுகொண்டார். அவ்வாறு கண்டுகொண்டபிறகு அவர்களுடன் சமத்துவமாக உரிமை பாராட்ட அடிகளார் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக அவர்களைப்பற்றித் தாம் என்ன நினைத்தார் என்பதை 'ஆதிப்பிரம்மம் வெளிப்படுத்த அருளறிவார் எம்பிரானாவாரே (589) என்று பேசிச் செல்கிறார். ‘மண்ணிடை வந்த ஒருவனை ஆதிபிரம்மம் என்று அறிந்தவர்களை தம்மால் வணங்கப்படும் பிரான்’ என்று அடிகளார் கூறுவது அவர் உறுதிப்பாட்டின் மற்றொரு வளர்ச்சி நிலையைக் குறிக்கிறது. மானுடம் பாடாத அடிகளார் ஒரு சிலரைமட்டும் பார்த்து, இவர் எம் பிரானாவார் என்று கூறுவாரேயானால் அந்த ஒரு சிலர் எத்தகையவராக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பாடலிலும் பாடுகிறார். மதுரையில் வந்தியின் பிட்டை உண்டு அவளுக்கு வீடு அளித்தவனை, மதுரையின் மங்கையர் மனங்கவர்ந்த குதிரைச்சேவகனை, மீன்வலை வீசிய கானவனை யார் என்று அறிந்தவர்கள் எம் பிரானாவார் என்று அடிகளார் கூறுவதில் வியப்பொன்றுமில்லை. அடுத்து நிற்பது உயிருண்ணிப் பத்தாகும். இதில் வரும் சில தொடர்கள் அடிகளாரின் உறுதிப்பாடு வளர்ந்து எந்த நிலையை அடைந்துள்ளது என்பதை அறிவிக்கின்றன. வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் (512) என்ற தொடராலும் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம்போகலொட்டேனே' என்ற தொடர்களாலும் உறுதிப்பாட்டை நன்கு அறியலாம்.