பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 திருவாசகம் சில சிந்தனைகள்-5 என்பதை அடிகளாரே உணர்ந்துள்ளார் என்ற கருத்துப் புலானாகின்றது. இறையனுபவத்தில் தோய்ந்து, நீங்காது நிற்கும் நிலையில்தான் அடிகளாரின் தலை, இறைவன் திருவடி தங்குவதற்கும் மலர்வதற்கும் பொருத்தமுடையதாக அமைகின்றது. எனவே, அவர் உறுதிப்பாட்டின் வளர்ச்சியில் இதுவும் ஒரு படியாகும். உயிருண்ணிப் பத்துக்கு அடுத்துக் காணப்பட வேண்டியது திருப்புலம்பல் ஆகும். இந்தத் தலைப்பு சற்றும் பொருத்தமில்லாதது என்பதை இப்பதிகத்தின் முன்னுரையில் கூறியுள்ளோம். உயிருண்ணி 7ஆம் பாடலில் (512) புகழ் முதலியவற்றை வேண்டேன் என்று கூறியவர், இன்னும் ஒரு படி மேலே சென்று உற்றார் உறவினர் முதலியவர்களையும் வேண்டேன் என்று ஒதுக்கிவிட்டார். சாதாரண நிலையிலுள்ள சராசரி மனிதனிலிருந்து மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் மனிதன்வரை அடிகளார் கூறிய புகழ் (fame), செல்வம், மண், பிறப்பு, இறப்பு, உற்றார், ஊர், பேர்(name) ஆகியவற்றிலிருந்து விடுபடுதல் ஏறத்தாழ இயலாத காரியம். துறவு நிலையை அடைந்தவர்கள்கூடப் புகழ் என்னும் பொன் தூண்டிலிலிருந்து விடுபடுவது கடினம். இந்த இரண்டு பாடல்களிலும் இவற்றை வரிசைப்படுத்திக் கூறி, வேண்டேன் என்று முடிவாகக் கூறிவிட்டமையின் அடிகளாரின் உறுதிப்பாட்டு வளர்ச்சியை நன்கு அறியமுடிகிறது. இவற்றிலிருந்து விடுபட்ட ஆன்மாவும், அதனோடு தொடர்புடைய உடம்பு, தலை என்பனவும் எவ்விதப் பந்தமும் இன்றி விடுதலை பெற்றுத் திகழ்கின்றதாதலின், அத்தலை இறைவன் திருவடி தங்கி மலரச் சிறந்த இடமாக அமைகின்றது. குருநாதரின் திருவடிகள் எல்லா நேரத்திலும் தம்முடைய சென்னிக்கண் மலர்வதை உணர்ந்துவிட்டார்; ஆதலின், இப்பொழுது வாக்கு மனோலயம் கடந்து நிற்கும்