பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இந்த வேண்டுகோள் நிறைவேறியதா? அடிகளாரின் உறுதிப்பாட்டின் வளர்ச்சியில் இந்த வேண்டுகோள் எந்த அளவிற்கு நிறைவேறியது என்பதை அறிவிப்பதே பிடித்த பத்தாகும். - நெகிழவிடாமல் தலைமேல் குவித்திருந்த தம் கையிருந்த இடத்தில் திருவடி மன்னி மலர்வதைக் கண்டார். உடனே அதனை இறுகப் பற்றிக்கொண்டார். திருச்சதகத்தின் முதற் பாடலில் அடிகளாரின் நிலை மூன்று அடிகளில் பேசப்பெற்றது. இப்பொழுது பிடித்த பத்தில் அவருடைய நிலை மாறவேயில்லை. ஆனாலும், என்ன புதுமை! நெகிழவிடாத இவர் கைகளினுள் ஏதோ ஒன்று சிக்கிக்கொண்டது. இப்போது அடிகளார் என்ன செய்தார்? சாதாரண மனிதர்களைப் பொறுத்தமட்டில் முன்பின் தெரியாத ஒன்று கைக்குள் அகப்பட்டால் நம் முதலாவது செயல் கைகளை உதறி அப்பொருளை எறிந்து விடுவதே ஆகும். ஆனால், அடிகளார் நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் அல்லவா? அவர் என்ன செய்தார்? தலையின்மேல் நெகிழவிடாதிருந்த கைகளுக்குள் குருநாதரின் திருவடி சிக்கிக்கொண்டது என்பதை உணர்கின்றார். அந்தத் திருவடிகளைச் 'சிக்கெனப் பிடித்தேன்’ என்று சொல்லிக்கொண்டே இறுகப் பற்றிக்கொள்கிறார். இவ்வாறு கூறியது &ff. அத்திருவடிகளையும் அவற்றையுடைய அத்தலைவனையும் பார்த்து ‘என்னை விட்டு நீ எங்கே போய்விடமுடியும்? ‘எங்கெழுந்தருளுவது இனியே என்று பாடுவது முறையா? தம்முடைய கூப்பிய கரங்களுக்குள் திருவடி வந்து சிக்கியவுடன் இறுகப் பற்றிக்கொண்ட அடிகளார் திருவடிக்குரியவனைப் பார்த்து, எங்கே, என் பிடியிலிருந்து தப்பிவிடு, பார்க்கலாம் என்று கூறுவதுபோலச் சவால் விடுதல் முறையா என்ற வினாத் தோன்றினால், அது முறைதான் என்ற விடையே கிடைக்கும். பொய் தவிர்ந்த