பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 31 இனிய சர்க்கரை வேண்டுமளவு கிடைத்தாலும் அதனை விட்டுவிட்டு புளிப்பு நிறைந்த புளியங்காயைத் தின்னும் விருப்பமுடைய சிலர் உண்டல்லவா? அத்தகையோரை இந்தப் புளிப்பை விட்டுவிட்டுத் சர்க்கரையைத் தின்னுமாறு செய்ய அடிகூடத் தேவைப்படுகிறது. இந்த முதுமொழியை மிக அற்புதமாகத் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கு விளக்கமாக அமைக்கிறார் அடிகளார். பெருந்துறை நிகழ்ச்சிக்கு முன்னர், பாண்டிய அரசின் தலைமை அமைச்சராக இருந்த ஒருவர், பல நேரங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். 'நடித்து மண்ணிடை பொய்யினைப் பலசெய்து; நான், எனது, எனும் மாயம் கடித்த வாயிலே நின்று என்பது வரை அமைச்சராக இருந்த வாழ்க்கையைக் குறிக்கும் பகுதியாகும். அரசியலில் பெரும்பதவியை வகிப்பவர், தம் நாட்டிற்காகப் பகைவரிடத்தில் நண்பர்போல நடித்தும், கீழ்மக்களிடம் சமத்துவம் உடையார்போல நடித்தும் நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும். இது ാങ്ങിലെ நடித்து' என்ற பகுதியின் விளக்கமாகும். பொய்யினைப் பேசி என்றுதான் கூறுவது மரபு. அதற்கு மாறாக, அடிகளார் 'பொய்யினைப் பல செய்து’ என்று கூறுவதால் அரசியல் வாழ்க்கையில் நடைபெறும் ஒன்றை இங்கே குறிக்கிறார். அரசனும் அமைச்சரும் பொய்யான ஒரு செயலை உண்மை என்று நம்பிச் செய்வது போல நடிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். பகை மன்னர்களும் நாட்டு மக்களும் கூட இவ்வளவு ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கின்றார்கள் என்று நினைந்து அதனை உண்மையென்றே நம்புவர். அந்த நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே பொய்யான இச்செயல் செய்யப்பெறுகிறது. இதனையே அடிகளார் 'பொய்யினைப் பல செய்து என்று சொல்கிறார். -