பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை-40 இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால், சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை, ஆதி குணமொன்றும் இல்லான் (348) என்று கூறிவிட்டு அப்படிப்பட்ட ஒருவனை நீ வரக் கூவாய்' என்று கூறினால், அது எப்படிப் பொருந்தும்? இந்த ஐயத்தைப் போக்குவதற்காகவே வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் (35) 'அந்தரத்தே நின்று இழிந்து இங்கு, அடியவர் ஆசை அறுப்பான் (352) 'பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து எனை ஆண்டவன்’ (356) 'எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டு (357) அருள்பவன் என்றும் கூறினார். இவ்வளவு தூரம் மண்ணிடை வந்தவனை நீ வரக் கூவினால், உறுதியாக வருவான் என்று கூறுவதன் மூலம் குயிலுக்கு ஒரு துணிவை உண்டாக்கினார். இப்போது குயிலுக்குப் புதியதோர் ஐயம் தோன்றலாயிற்று. அடிகளார் கூறிய செய்திகள் மனிதனை ஆட்கொள்வதற்காக அவன் வந்தான் என்றுதானே கூறுகின்றன? அப்பாவிக் குயிலாகிய தனக்கு இது எவ்வாறு பொருந்தும் என்ற ஐயம் நியாயமானதுதானே? அதனைப் புரிந்துகொண்ட அடிகளார் 'அஞ்சாதே! உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்' (354) என்று கூறுவதன் மூலம் குயிலின் மனத்தில் ஒரு தென்பை உண்டாக்குகிறார். வண்டையும் குயிலையும் மட்டும் விளித்துப் பாடுவதின் நோக்கம் ஒன்று உண்டு. ஒன்று ஓயாது திரிந்துகொண்டே இருப்பது; மற்றொன்று இருந்த இடத்திலேயே அமைதியாக இருப்பது. உயிர்கள் அனைத்தும் இந்த இரண்டு தொகுப்புகளில் அமையும். இதனால் இவ்விரு பதிகங்களும் உயிர்வர்க்கம் முழுவதற்கும் வழி கூறுவனவாய் அமைந்துள்ளன. எனவே இவ்விரண்டு பதிகங்களும் ஒரு தலைப்பின்கீழ் வைக்கப் பெற்றுள்ளன.