பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408-திருவாசகம் சில சிந்தனைகள்-5 தோன்றமுடியும், முதலாவது, - அப்பொருளைப் பாரா விட்டாலும், அதுபற்றிப் பிறர் விவரமாகவும் விரிவாகவும் பேசுவதைக் கேட்டு, அப்பொருளினிடத்து ஈடுபாடு தோன்ற முடியும். அந்த ஈடுபாடு அதனைப் பெற வேண்டும் என்ற ஆசையையே தோற்றுவிக்கின்றது. அந்த ஆசை வளர்கின்ற முறையில் அப்பொருள் கிடைக்கா விட்டால் அது ஏக்கமாக முடிகின்றது. இரண்டு - பொருளைப் பெற்றுச் சிலகாலம் அனுபவித்து, அந்த அனுபவத்தில் தன்னை இழக்கின்ற நிலையில், மேலும் அதனை அனுபவிக்க வேண்டும் என்ற நினைவு வளர்கின்ற நேரத்தில், அப்பொருள் கைநழுவிவிட்டால் அது பெரிய ஏக்கமாகிவிடுகிறது. இதுவே இரண்டாவது வகையாகும். அடிகளாரைப் பொறுத்தவரையில் அவருடைய ஏக்கம் இரண்டாவது வகைகயைச் சேர்ந்தது. வெறும் கேள்வி மாத்திரையாய் நின்ற ஒன்றன்று அவர் அனுபவம். திருப்பெருந்துறையில் பொருளை நேரே பெறவும் தம்முடைய தலையில் திருவடி சொரூபமாக அந்த அனுபவம் தொடர்பு கொள்ளவும் அதே கணத்தில் அற்புதமான அமுததாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றப் பெறவும் கிடைத்த அனுபவமாகும் இது. இந்த அனுபவம் முதிர்ந்த நிலையில் எனை நான் என்பது அறியாமல், 'பகல் இரவாவதும் அறியாமல் (508 சிலகாலம் வாழ்கிறார் அடிகளார். திடீரென்று அனைத்தும் மறைந்துவிடுகின்றன; அனுபவமும் கைநழுவிவிடுகிறது. மனம் நோகிறார்; அரற்றுகிறார்; செய்வதொன்று அறியேனே என்று புலம்புகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அமைதி ஏற்படுகின்றது. அந்த அனுபவத்தை நினைந்து நினைந்து பரா அமுதாகிய திருவாசகம் பொங்கி வெளிப்படுகிறது.