பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414-திருவாசகம் சில சிந்தனைகள்-5 ஆசை பேராசையாக வளரும்போது இந்த நானையே மூடிக்கொண்டு பேராசை வளர்ந்துவிடுகிறது. அதன் பயனாக நானுக்குரிய பல இயல்புகள் மறைந்துவிடுகின்றன. நான் என்பது சாதாரண நிலையில் இருக்கும்போது, சுற்றுச் சூழ்நிலைபற்றிய நினைவு, அவற்றை இனங்கண்டு அறியும் ஆற்றல், வேண்டியவர்-வேண்டாதார் என்ற வேறுபாட்டு உணர்ச்சி, பிற உயிர்கள்பற்றிய சிந்தனை, தனக்கும் பிற உயிர்கட்குமுள்ள தொடர்பு என்பவை வெளிப்படையாவும், உள்முகமாகவும் நின்று பணிபுரியும். ஆனால், பேராசை வளரும்போது 'நான் பேராசையால் மூடப்படுவதால் இந்தப் பேராசை ஒன்றைத்தவிர வேறு எதுவும் நினைவில் வருவதுமில்லை; அவை பணிபுரிவதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நானு'க்கு இயல்பாக அமைந்துள்ள பசி, தாகம் போன்ற உணர்ச்சிகள்கூடச் செயலிழந்துவிடுகின்றன. நாளாவட்டத்தில் இந்தப் பேராசை அவனையே அழித்து விடுகிறது. அடுத்து பேராசைக்குரிய புறநடைபற்றிக் காணலாம். ஒரு கொள்கை, குறிக்கோள் என்பவற்றிலும் ஆசை தொடங்கிப் பேராசையாக வளர்வதுமுண்டு. அப்பொழுது இதற்குப் பேராசை என்ற பெயரில்லை. வாழ்க்கையில் தன்னலமற்று, பிறர்பொருட்டாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நினைவே குறிக்கோள் என்று சொல்லப்பெறும். 'உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் (குறள்:596) என்ற குறளும் இதுபற்றி வந்ததேயாகும். அந்தக் குறிக்கோள் சிறிதா-பெரிதா, பயனுடையதா அல்லாததா என்று நாம் வினவுவதற்கு இடமுமில்லை; உரிமையுமில்லை. பிறர் வேண்டுவதையெல்லாம், அவை தம்பால் இருப்பின் கொடுத்துவிடுவது என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர்களே அடியார்கள். கொடுக்கப்படும் பொருள், நெய்யப்பட்ட துணியாக இருக்கலாம்; பிச்சையெடுக்கும் ஒடாக இருக்கலாம்; தான் பெற்ற பிள்ளையின் கறியாக இருக்கலாம். ஏன்? மனைவியாகக்கூட இருக்கலாம்.