பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_417 யிருந்து அவர் திருவடிகளை நெஞ்சாரத் தழுவிக் கொண்டே இருத்தல்வேண்டும் என்ற பேரவா, குரு தரிசன அவாவைவிட ஒருபடி அதிகமாகவே வளர்ந்துவிட்டது. திருவடிகளைப் பற்றிக்கொண்டிருந்தபொழுது, தொடக்கத் தில் மூன்று பொருள்கள் இருந்தன. அவையாவன: அடிகளார், திருவடி, பற்றுதலாகிய செயல். சற்று நேரத்தில் திருவடி பற்றுதலாகிய செயலில் மறைகின்றது. அடுத்த விநாடி அடிகளாரும் பற்றுதலாகிய செயலில் மறைகின்றார். மூன்று இருந்த இடத்தில் பற்றுதலாகிய செயல்மட்டுமே எஞ்சி நின்றது. அடிகளாருக்குப் பேரவா இரண்டு நிலைகளில் வளர்ந்தது என்று கண்டோம். அடியாரிடையே தாமும் இருக்க வேண்டும் என்ற அவருடைய இரண்டாவது மிகு அவா கோயில் மூத்த திருப்பதிகத்தில் இடம்பெறுகிறது. அதிலுள்ள பத்துப் பாடல்களில் இருபாடல்கள் (380,387) தவிர ஏனைய பாடல்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அடியார் கூட்டம் பற்றிய கூற்று இடம்பெறுகிறது. இப்பதிகத்தின் முதல் பாடலில்(378, “அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் என்று வெளிப்படையாகவே தம்முடைய மிகு அவாவைப் பாடுகிறார். ‘அடியேற்கு உன் முகந்தான் தாராவிடின் முடிவேன்' (380) என்ற இடத்து மீட்டும் குருநாதர் காட்சி கிடைக்கவேண்டும் என்ற தம் பேரவாவைத் தெளிவு படுத்துகிறார். இப்பதிகத்தின் இறுதிப்பாடலில் (387) மேலே கூறிய வேண்டுகோளை அடுத்து அந்த இரண்டு மிகு அவாக்களும் நிறைவேறும் என்ற உறுதிப்பாடு பேசப்பெறுகிறது. நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா என்ற சொற்றொடரில் குருநாதர் காட்சியும் அடியார் கூட்டக் காட்சியும் எப்படியும் தமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர்விடுவதைக் காண்கிறோம்.