பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424-திருவாசகம் சில சிந்தனைகள்-5 இப்பாடலுக்கு உரை எழுதிய காலத்தில் (பகுதி-4: பக்-137,138) 'கண்டேன்’ என்பதற்குக் 'கண்ணால் கண்டேன்’ என்று பொருள் கூறத் தேவையில்லை; கருத்தில், உணர்வில் கண்டேன் அல்லது உணர்ந்தேன் என்பது பொருளாம்’ என்று கூறியுள்ளேன். இப்போது அதற்கு முரணாக இப்புதிய பொருளையும் எழுதியுள்ளேன். இறைவன் கூத்தன் வடிவைப் பெற்றுள்ளான். தொடக் கத்தில் அந்த வடிவில் ஈடுபாடு கொண்ட அடிகளார், மெல்ல மெல்ல வடிவு மறைந்து, பண்பு என்ற நுண்பொருள் அங்கே இருப்பதை உணர்ந்ததோடு மல்லாமல், கண்களாலும் கண்டார் என்றும் பொருள் கூறலாம். பசுகரணங்கள் பதிகரணங்களாக மாறின என்று சைவவாதிகள் அடிப்படையில் நின்று இதற்குப் பொருள் கூற நான் முன்வரவில்லை. அடிகளாரின் இறையனுபவ வளர்ச்சியின் முடிவில், அவர் சிவமாகவே ஆகிவிட்டார். தாமாக ஆனாரா? இல்லை என்கிறார் அடிகளார். 'சிவமாக்கி எனை ஆண்ட' என்ற தொடரால் இவரை ஆள்வதற்கு முன்னரே குருநாதர் கருணையால் இவர் சிவமாக ஆக்கப்பெற்றார். சிவமாக ஆக்கப்பெற்றமையின் ஆனந்தமாகிய பண்பைக் கண்களாலும் காணமுடிந்தது. எனவே, 'அந்தமிலா ஆனந்தத்தை' அணிகொள் தில்லையில் கண்டார் என்றால், கூத்தனுடைய வடிவத்தையும் கடந்துநிற்கும் ஆனந்த சொரூபத்தைக் கண்களால் கண்டார் என்று பொருள் கொள்வதே சிறப்புடையதாகத் தோன்றுகிறது. அதேபோல இப்பதிகத்தில் கோதில் அமுது ஆனானைக் கண்டேன்’ (479) கிளரொளியைக் கண்டேன்' (484) என்ற தொடர்கள் பண்புப் பொருள்களை உணர்த்தி நிற்பதைக் காணலாம். இவற்றைக் கண்டேன் என்று கூறுவதால் பண்புகளையும் கண்ணால் காணும் ஆற்றலை அடிகளார் பெற்றுள்ளார் என்பதை அறியலாம்.