பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 திருவாசகம் சில சிந்தனைகள் 5 எண்ணம் அனைவர் மனத்திலும் தோன்றுவது ஒன்றாகும். தாம் செல்லும் வழி சரியானதுதான், தம்முடைய நம்பிக்கை உறுதியானதுதான், தமக்குக் கிடைத்துள்ள பெரும்பேறு நிலையானதுதான் என்பது அடிகளாரைப் பொறுத்தமட்டில் தெளிவான ஒன்றாகும். அப்படியிருக்க, இப்பொழுது மனத்திடைப் பழைய நிகழ்ச்சியின் புதிய படமொன்று ஒடுகின்றது. திருப்பெருந்துறை, குருந்த மரம், அதன் அடியில் குருதரிசனம் என்பவை மீட்டும் மனத்திடை வந்தவுடன் இது என்றோ நிகழ்ந்த ஒன்று என்பதை அடிகளார் மனம் மறந்துவிடுகிறது. முன்னொரு நாள் நிகழ்ந்ததாயினும் இன்று மீட்டும் அதனை நினைக்கும்பொழுது அன்று தோன்றாத ஒரு புதிய விருப்பம் இன்று தோன்றுகிறது. இந்நிகழ்ச்சி நேரடியாக நடைபெற்றபொழுது, அடிகளார் தம்மை மறந்து ஆனந்த சாகரத்தில் மூழ்கியிருந்தமையின் குருநாதர் வாய் திறந்து பேசவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. தில்லைக்கு வருக என்று குருநாதரின் ஆணை இவருக்குக் கேட்டது உண்மைதான். அதற்குமேல் அவர் எதுவும் பேசவேண்டும் என்று அன்று புதிதாகப் பிறந்த மணிவாசகர் எதிர்பார்க்கவில்லை. இத்துணை நாட்கள் கழித்து, அந்த நிகழ்ச்சியை நினைக்கும்பொழுது குருநாதர் வாய் திறந்து, அது என்ன என்று கேட்கவேண்டும் என்ற விருப்பம் மனத்திடைத் தோன்றுகிறது. அது என்ன என்று நேரடியாகக் கூறாமல் அதெந்துவே என்ற திசைச்சொல்லால் குறிப்பிடுவதிலும் ஒரு நுண்மையான பொருள் உண்டு. அது என்ன என்ற இந்த வினாவைக் குருநாதர் கேட்க வேண்டுமென்று அடிகளார் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர் திருவாய்மலர்ந்து ஏதாவது இரண்டு சொற்கள் கூறினால், அதைக் கேட்கும் பேறு தமக்குக் கிட்டினால் அதுவே போதும் என்று எண்ணினார். அதனாலேயே பலருக்கும்