பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 திருவாசகம் சில சிந்தனைகள்-5 மானிட சாதிக்கு நம்பிக்கையூட்டக் கூத்தன் கையாண்ட வழி இது என்று கூறுவதில் தவறில்லை. இவைபோன்ற பாடல்கள் அடிகளாரின் வலுக்குறைவையோ துயரத்தையோ எடுத்துக் காட்டும் பாடல்கள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டால், கூத்தன் நிகழ்த்தும் நாடகத்தில் இதுவும் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்த தொகுப்பிற்குப் புதிய திருப்பம்’ என்ற தலைப்புக் கொடுக்க ஒரு வலுவான காரணம் உண்டு. ‘நாயினுங் கடையேன்” என்று தம்மைப் பலகாலும் கூறிக்கொள்ளும் ஒருவர், அடியார் கூட்டத்தையும் குருநாதரையும் மறுபடியும் காணாமல் இந்தப் பிறவி செத்து ஒழிந்தால், ஊர் கைகொட்டி நகையாட ஏதுவாகும் என்றெல்லாம் பாடிவந்த ஒருவர், திடீரென்று தம்மைச் சுற்றிப் பார்க்கிறார். குறிக்கோள் அற்று, இனி என்னே உய்யுமாறு’ என்று எண்ணி, செல்லும் திசையறியாது, சுற்றிச் சுற்றி வரும் மானுட சாதியைக் காண்கின்றார். அந்த விநாடி, தம்முடைய பழைய நிலை நினைவுக்கு வருகின்றது. 'நாமும் இப்படித்தானே இருந்தோம்! நம்முடைய பிரார்த்தனையை ஏற்று நம்மை ஆட்கொண்டவன், இவர்களையும் ஆட்கொள்ளாமலா விட்டுவிடுவான்’ என்ற எண்ணம் தோன்றுகிறது. அவருடைய வளர்ச்சி அவருக்கே தெரிகிறது. கணக்கிலாக் கோலத்தை, திருக்கழுக்குன்றத்தில் கண்ட அவருக்குத் தன்னம்பிக்கை மிகப் பெரிதாக வளர்ந்து விட்டது. மறுபுறம் திரும்பிப் பார்த்தால், தில்லைக் கூத்தனின் திருவடி கூப்பிடு தூரத்தில் அல்லாமல், தொடுதுரத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. இனி அவர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். தொடு தூரத்தில் இருக்கும் அத்திருவடியை நோக்கி ஒரு தப்படி எடுத்து வைத்தால், அத்திருவடி முன்னேறி வந்து, தம்மை ஆட்கொள்ளச் சித்தமாக உள்ளது என்பதை உணர்கின்றார்