பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 ல் திருவாசகம் சில சிந்தனைகள்-5 இந்த நிலையில் சிவ புராணம் பாடப்பெற்றது. சிவன் அவன், என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன் யான் (1:17-20) இந்த நான்கு அடிகளும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை. திருப்பெருந்துறையில் அடிகளாரின் சிந்தையுள் புகுந்தான்; புகுந்தவன் மீட்டும் வெளியே செல்லவில்லை. எனவேதான், சிந்தையுள் நின்ற அதனால் என்று பாடினார். புகுந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக மணிவாசகரை விழுங்கி, இப்பொழுது அவனே அங்கே முற்றிலுமாக வியாபித்து விட்டான். அதனையே அடிகளார் 'சிவமாக்கி எனை ஆண்ட' என்று சொல்கிறார். இந்த நிலையில், அடிகளார் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும், எதைப் பாடினாலும் அதற்கு அவர் பொறுப்பல்லர். இதனை உணர்ந்தமையால்தான் அடிகளார் ‘சித்தம் சிவமாக்கி, செய்தனவே தவமாகும் அத்தன்' (320) என்று பாடியுள்ளார். சிந்தையுள் புகுந்து நின்ற அவனை அவர் வணங்கினார். பின்னர் அங்கே வணங்குபவரும் இல்லை; வணங்கப்படுபவனும் இல்லை. அப்படியானால் யார் இருக்கிறார்கள்? மணிவாசகர் என்ற ஒருவர் இருந்த இடத்தில், அவர் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தனதாக்கிக் கொண்டவன் இப்பொழுது சிவபுராணத்தைப் பாடுகிறான். 'யான் உரைப்பன்' என்பதில் உள்ள தன்மை ஒருமை வினைமுற்றிற்கு, அடிகளாரைக் கர்த்தாவாக ஆக்காமல், அவரை விழுங்கி நின்றவனையே கர்த்தாவாக ஆக்க வேண்டும். அப்படியானால் சிந்தை மகிழ' என்பதற்கு மானிட சாதி முழுவதும் சிந்தை மகிழ என்று பொருள் கொள்ள வேண்டும். உயிர்வர்க்கம் முழுவதும் சிந்தை மகிழுமாறு சிவபுராணத்தை உரைக்கின்றேன் என்று