பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_45 பாட்டிற்கும் சொல்லப்பட வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. அடிகளாரின் பாடல்களிற்கூட, மேலோட்டமாகப் பார்ப்பதற்கு, முரண்பாடுகள்போலத் தோன்றும் பல கருத்துக்கள் இடம்பெற்றிருக்கும். அம்மாதிரி இடங்களில், அது ஒரு மனநிலையில் பாடப்பெற்றது, இது ஒரு மனநிலையில் பாடப்பெற்றது என்பதைக் கருத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றைக் காணலாம். திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் திருவடி தீட்சை முதலியன பெற்று, முற்றிலும் புதுமனிதராக வெளிவந்த அடிகளார், தம் பிறப்பு அறுபட்டது, தம் வினைகள் சுட்டெரிக்கப்பட்டன, இறைவன் தம்முள் புகுந்து அங்கேயே தங்கிவிட்டான் என்று பல இடங்களிலும் பாடிச்செல்வதைக் காணலாம். ஆனால், அதே அடிகளார் 'பாவிடை ஆடு குழல்போற் கரந்து பரந்தது உள்ளம் ஆ கெடுவேன்' (415) என்றும் செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா (497) என்றும் பாடுவது முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றவில்லையா? ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றிடை முரண்பாடு இல்லை என்பது தெளிவாகும். இறையருளில் தோய்ந்து, இறையனுபவத்தில் மூழ்கி. 'நான், எனது என்பவை அற்று இருக்கும் அனுபவ நிலையிலிருந்து வெளிவந்தவுடன் பாடியவை பிறப்பு அறுபட்டுவிட்டது, வினை சுட்டெரிக்கப்பட்டது என்ற கருத்துக்களையுடைய பாடல்கள் ஆகும். இந்த ஒரு நிலை அவ்வப்பொழுது வந்துபோகிறதே தவிர, அடிகளார் விரும்பும்பொழுதெல்லாம், விரும்பிய முறையிலெல்லாம் அந்த அனுபவம் கிட்டுவதில்லை. அப்படிப்பட்ட நிலைகளில் மனம் வருந்திப் பாடியவையாகும் பின்னர்க் காட்டப்பெற்ற பாடல்கள்.