பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருவாசகம் சில சிந்தனைகள்-5 மனித மனத்தின் இயல்புகளில் முக்கியமானது, ஒரு செயலில் அதிகமாக ஈடுபட்டால் மற்றச் செயல்களை மறப்பதாகும். மானிடப் பிறப்பில் அடிகளாரளவு கல்வி முதலியவற்றில் மேம்படாமல் சாதாரண நிலையில் இருப்பவர்கள்கூடப் பூசை முதலியவற்றில் ஈடுபட்டுத் தங்கள் துன்பங்களைப் போக்கிக்கொள்ள முயல்வர். பூசனை புரிபவர் அனைவரும் உலகப்பொருட்கள் எதனையும் வேண்டாமல் நிஷ்காமியமாகப் பூசனை புரிகின்றனர் என்று சொல்ல இயலாது. மேல்நிலையில் உள்ளவர்களும் சிவபூசை முதலியவற்றில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடும் முறையை அடிகளார் இப்பாடலின் முற்பகுதியில் பேசுகிறார். இப்பிறப்பினில் இணைமலர் கொய்து இயல்பொடு அஞ்செழுத்து ஒதி, தப்பிலாது பொன் கழல்களுக்கு இடுதலே அம்முறை. அவ்வாறு தாம் செய்யவில்லை என்பதை இடாது' என்ற சொல்லால் குறிக்கின்றார். "இணைமலர்' என்றதால் மலர்களை மாலையாகக் கட்டி இறைவன் திருவடிக்குச் சாத்துகின்ற பழக்கம் அந்நாள்தொட்டே இருந்துவந்ததை அறியமுடிகிறது. அதைவிட அற்புதமான ஒரு செய்தியை இயல்பொடு அஞ்செழுத்து ஓதி' என்ற தொடரில் குறிக்கின்றார். அஞ்செழுத்து ஒதுதல் என்பது சரிதான். ஆனால் இயல்பொடு என்ற சொல்லை ஏன் இங்கே அடிகளார் பயன்படுத்துகிறார்? அப்படியானால் இயல்பாக எப்பொழுதும் அஞ்செழுத்து ஒதுதல், குறிப்பிட்ட எண்ணிக்கை ஜெபிக்க வேண்டும் என்ற கருத்தில் செயற்கையாக ஒதுதல் என இருவகை உண்டா? இயல்பொடு என்ற சொல்லை அடிகளார் பயன்படுத்தியமையால் மேலே கூறிய இருவகையினரும் அக்காலத்திலும் உண்டு என்பதை அறியமுடிகிறது.