பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54--திருவாகம் சில சிந்தனைகள்-5 இந்நாட்டு மரபுபற்றி, அடிகளார் தம்மைப் பெண்ணாகக் கற்பித்துக்கொண்டு இப்பாடலைப் பாடுகிறார். இறைவன் ஒருவனே ஆண்மகன், ஏனைய உயிர்கள் அனைத்தும் அவனைப் பற்றிப்படரும் கொடிகள் போன்றவை; ஆதலின் எல்லா உயிரும் பெண்களே என்று கொள்ளும் மரபு இந்நாட்டிடை தொன்றுதொட்டு உண்டு. வைணவர்கள் நாராயணமூர்த்தியைப் புருஷோத்தமன் என்று கூறுவர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து காதல் வாழ்க்கையைத் தொடங்கும்போது அந்த வாழ்க்கையின் அடிப்படையில் ஆழமாக நிலைபெற்றிருக்கும் ஒன்றை அறிதல் வேண்டும். ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும் அன்பு வளர்ச்சியடைந்து ஒருநிலையில் உடல்தான் இரண்டே தவிர, இருவருக்குமே உயிர் ஒன்றுதான் என்ற நிலை தோன்றும். இந்த நிலையில் அந்தத் தலைமகனுக்கு, தான்' என்ற தனித்தன்மையும் அவளுக்குரிய தனித்தன்மையும் மெள்ளக் கரைந்துவிடுகின்றன. எனவே, இந்தக் காதல் வாழ்க்கை, அழிக்க முடியாத தன்முனைப்பை அழிக்க உதவுகிறது. இதனையே அடிகளார் தோகைக்கும், தோன்றற்கும் ஒன்றாய்வரும் இன்ப துன்பங்களே என்று திருக்கோவை யாரில் (7) மிக அற்புதமாகப் பாடியுள்ளார். அகத்துறை வாழ்க்கையின் அடிப்படை, தன்முனைப்பை அறவே போக்குதல் என்ற உண்மையைக் கண்டுகொண்ட நம் பெரியோர், தன்முனைப்பை அறவே போக்குகின்ற மற்றொன்றையும் கண்டனர். அதுவே பேரின்பமாகும். எனவே, ஒன்றைச் சிற்றின்பம் என்றும், மற்றொன்றைப் பேரின்பமென்றும் கூறினர். சிற்றின்பத்தின் முதிர்ச்சி தன்னை மறந்து தன் நாமம் கெடுதல் ஆகும்; பேரின்பத்தின் முதிர்ச்சியும் அதுதான்.