பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னிப்பத்து-57 பகுதியாகிய தலையின்மேல் குருநாதரின் திருவடி நிலைபெற்றுத் தங்கிய அந்த விநாடி என்ன நிகழ்ந்தது தெரியுமா? இரத்தம் ஊறிக்கொண்டிருந்த அந்த உடலில் திருவடி பட்டவுடன் அமுது மேலும்மேலும் ஊறலாயிற்று. திருவடி பட்ட இடம் திருவாதவூரரின் தலைதானே? அதனால் அத்தலையில் மட்டும்தான் அமுது ஊறியிருக்கும் என்று நினைத்துவிடவேண்டா, அற்புதமான அமுததாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றப்பெற்றன. ஆதலால் உடம்பு முழுவதும் அமுதம் பாய்ந்தது என்பதையே காயத்துள் அமுது ஊறஊற என்கிறார் அடிகளார். இது முதலாவது செயலாகும். பல சமயங்களில் நம்மிடம் புறத்தும் அகத்தும் ஏற்படுகின்ற மாறுதல்களை நாமே கவனிக்காமல் இருந்து விடுவதும் உண்டு. அம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் நண்பர்கள், நம்மிடம் ஏற்பட்டுள்ள மாறுதல்களைச் சுட்டிக்காட்டி வியக்கின்றனர். அதேபோல அடிகளாரின் உடம்பில் அமுது ஊற ஊற அடிகளார். அதனைக் கவனிக்காமல் இருந்திருத்தல் வேண்டும். இதற்கும் ஒரு காரணம் உண்டு. திருவடியினிடத்துக் கொண்ட பக்தி காரணமாகச் சுயநினைவை மறந்து குருநாதர் திருவடியிலேயே முற்றிலுமாக ஈடுபட்டிருந்தார் ஆதலின், தம்முடைய உடம்பினுள் ஏற்பட்ட இம்மாற்றத்தை அடிகளார் முதலில் கவனிக்கவில்லைபோலும் இப்பொழுது குருநாதர் என்ன செய்தார் தெரியுமா? கவனிக்காமல் இருந்த அடிகளாரை, அவருடைய அகத்துள் ஏற்பட்ட மாறுதலை, ‘காண்பாயாக!' என்று ஏவினார். அந்த ஏவலையும் அத்திருவடியே செய்தது என்ற கருத்தில் நீ கண்டுகொள்! என்று காட்டிய சேய மாமலர்ச் சேவடி’ என்று பாடுகிறார். இதுவே திருவடி செய்த இரண்டாவது செயலாகும்.