பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. எண்ணப் பதிகம் (ஒழியா இன்பத்து உவகை) அடிகளார் தனியே அமர்ந்துகொண்டு தம்முடைய எண்ணங்களை ஒடவிட்ட பகுதியை வரிசைப்படுத்த முயல்கின்றன இதில் வரும் பாடல்கள். இப்பதிகத்தில் திருவாசகத்தில் வேறு எங்கும் இடம் பெறாத மூன்று நான்கு செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவை அங்கங்கே குறிக்கப்பெற்றுள்ளன. ஒழியா இன்பத்து உவகை என்ற உட்தலைப்புச் சற்று விநோதமானது. ஒழியா இன்பம் என்பது வீடுபேற்றைக் குறிக்கும் சொல்லாகும். உவகை என்பது சாதாரண மனித மனநிலையில் கிடைக்கின்ற மகிழ்ச்சியாகும். நிலைபேறான ஒழியா இன்பத்தையும், சில நேரம் வந்துபோகும் உவகையையும் ஒன்றாக இணைத்துக் கூறியது வேடிக்கையாக உள்ளது. இந்த ஆறு பாடல்களிலும் உவகை எங்கும் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாகக் கழிவிரக்கமே பெரிதாக இடம்பெற்றுள்ளது. 599. பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும் சீர் உரு ஆய சிவபெருமானே செம் கமல மலர் போலும் ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே ஒர் உரு ஆய நின் திருஅருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே f