பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இப்பாடலின் முதல் இரண்டு அடிகளில் சாதாரண மக்களின் இரண்டாட்டமான மனநிலையைத் தம்மேல் ஏற்றிக்கொண்டு பாடுகிறார். 'உனக்கு அடிமைசெய்ய உரியேன் அல்லேன்' என்று ஏன் தொடங்கவேண்டும்? திருவடிக்கு அடிமைபூண்டு ஒழுகத் தமக்கு உரிமையில்லை என்ற முடிவிற்கு எப்பொழுது வந்தார்? உடல், பொருள், ஆவி அனைத்தையும் கண்டபொழுதே கொண்டிலையோ என்று பாடுபவர் (502), அடிமை செய்ய உரியேன் அல்லேன் என்ற முடிவுக்கு ஏன் வரவேண்டும்? அருள் செய்த குருநாதர் உடனே மறைந்துவிட்டமையால் தம்முடைய அடிமைத் திறத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை; அதனால்தான் மறைந்துவிட்டார்போலும் என்ற முடிவிற்கு வந்திருக்கலாம். அதனால்தான் அடிமை செய்ய உரியேன் அல்லேன்' என்று பாடுகிறார். அடிமைத் திறத்தை ஏற்றுக்கொள்ளாமல் மறைந்தது குருநாதருடைய செயலாகும். அடிமையின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அடுத்த தொடரில் அடிகளார் குறிப்பிடுகின்றார். குருநாதரைப் பிரிந்து ஒருபொழுதும் தரிக்க விரும்பாத மனநிலையில் உள்ளார். குருநாதரோ அடிமைத்திறத்தை விரும்பாமல் மறைந்துவிட்டார். அடிமையோ ஒரு விநாடியும் அவரைப் பிரிந்திருக்க விரும்பவில்லை. இது ஒரு இக்கட்டான நிலை. குருநாதரை வற்புறுத்தித் தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தல் அடிமைக்கு இயலாத காரியம். அடிமை ஒரு கணமும் பிரிந்திருக்க இயலாமல் வருந்துகிறார் என்பதைக் குருநாதர் தெரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. தம் குறையைக் குருநாதரிடம் சென்று எடுத்துச் சொல்ல யாருமில்லை. இந்த நிலையில் செய்வதறியாது திகைக்கின்ற திகைப்புத்தான் மிஞ்சுகிறது.