பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணப் பதிகம்-8 அதனையே இன்னது செய்வது என்று அறியேன் நாயேன்” என்கிறார். நம்பிக்கை இழந்த இந்த மனநிலையில் எங்கோ ஒரு மூலையில் ஒரு வெளிச்சம் தோன்றுகிறது. அந்த வெளிச்சத்தில் திருப்பெருந்துறை நிகழ்ச்சி ஒடும் படம்போல் தெரிகிறது. குருந்தமரத்தடியில் இருந்த ஒப்பற்ற பெரியோனாகிய குருநாதர், தம்மை வந்து வணங்கிய திருவாதவூரருக்கு தம் பெய்கழலைக் காட்டினார்; கண்டுகொள்’ என்று குறிப்பால் உணர்த்தினார். காட்டியது என்னவோ திருவடிகளைத்தான். அதனைத்தான் திருவாதவூரர் இரண்டு கண்களாலும் பார்த்துக்கொண்டுள்ளாரே. அப்பொழுது அவருக்கு என்ன தெரிந்தது? இரண்டு திருவடிகள்மட்டுமே தெரிந்திருக்கும். அந்தத் திருவடிகள் ஏனைய மனிதர்களுடைய கால்களைப் போலத்தானே இருந்திருக்கும்! அந்த விநாடியில் குருநாதர் ஒரு நுண்மையான காரியத்தைச் செய்தார். திருவடிகளைக் காட்டி 'கண்டுகொள்' என்று குறிப்பால் உணர்த்தினார். ‘வாதவூரனே! இவைகள் கால்களல்ல; எனது திருவருளுக்கு ஒரு புறச்சின்னம். இக்கால்களின் மூலம் என் கருணையையும் திருவருளையும் கண்டுகொள்வாயாக’ என்ற ஆணையைக் குறிப்பால் உணர்த்தினார். கண்டுகொள் என்று உன் பெய்கழல் அடி காட்டி என்றதன் பொருள் இதுவேயாகும். 'காண்பார் யார் கண்ணுதலாய் காட்டாக்காலே’ (திருமுறை: 6.953) என்று நாவரசர் பெருமான் கூறியதற்கு ஒரு விளக்க உரையாகும் இப்பகுதி. காட்டாக்காலே என்று நாவரசர் பெருமான் கூறியதையே 'பெய்கழல் அடி) காட்டி என்று அடிகளாரும் பேசுகின்றார்.