பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவாசகம் சில சிந்தனைகள்-5 அடிகளாருக்கு ஒரே ஊரில் ஒரே இடத்தில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இந்த இரண்டு காட்சிகளும் கிட்டிவிட்டன. இந்த நிலையில், இந்த உடம்போடு வாழும் வாழ்வில், இனி அடைய வேண்டியது வேறு எதுவும் இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார். இதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படுகிறது. இந்தப் பிறப்பில் தாம் sigfoot-ils வேண்டியதை அடைந்துவிட்ட காரணத்தால் தம்மை நோக்குவதை விட்டுவிட்டு மனித சமுதாயத்தை நோக்குகின்றார். இதுவரைப் பாடாத முறையில் யாத்திரைப் பத்துப்போன்ற பதிகங்கள் தோன்றுகின்றன. இப்பதிகத்தில் வரும் பாடல்கள் சில, தன்மைப் பன்மையாக அமைந்துள்ளன. ஒருப்படுமின் போன்ற சொற்கள் தம் உடன்இருந்தவர்களை விளித்துப் பேசுவது போல் அமைந்துள்ளன. சிவபுர யாத்திரைக்குப் புறப்பட அனைவரும் தயாராக இருங்கள், புறப்படுவதற்குரிய காலம் வந்துவிட்டது என்று கூறுவதுபோல் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. இந்தப் பதிகத்திற்கு உட்தலைப்புத் தந்தவர்கள் ‘அனுபவா தீதம் உரைத்தல்' என்று தலைப்பு தந்துள்ளனர். திருவாசகத்தில் நூற்றுக் கணக்கான பாடல்களில் தாம் பெற்ற இறையனுபவத்தை அடிகளார் பாடியுள்ளார். அப்படியிருக்க, இப்பதிகத்தில் கூறப்பெற்றவற்றிற்கு அனுபவ+அதீதம்-அனுபவத்தின் எல்லையற்ற தன்மை’ என்று தலைப்பைக் கொடுக்க என்ன அடிப்படை என்பது புரியவில்லை. குழப்பமான உட்தலைப்புக்களுள் இதுவும் ஒன்று என்று கொள்ளலாம்.