பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90_திருவாசகம் சில சிந்தனைகள்-5 606. புகவே வேண்டாம் புலன்களில் நீர் புயங்கப் பெருமான் பூம் கழல்கள் மிகவே நினைமின் மிக்க எல்லாம் வேண்டா போக விடுமின்கள் நகவே ஞாலத்து உள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே 2 சென்ற பாடலில் உடையான் கழல்புக ஆயத்தமாக இருக்கும் அடியார்களைப் புகவே ஒருப்படுமின் என்று கூவியழைத்தார். இந்தப் பாடலில் அந்த நிலையை அடையாத, ஆனால் அடையவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இருக்கும் சாதகர்களை விளித்துச் சில அறவுரைகள் கூறுகின்றார். - - 'மூலப் பரம்பொருளாகிய அவன், பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கின்ற அவன், குருநாதர் வடிவில் இம் மண்ணிடை வந்தான். எத்தனையோ அடியார்கள் புற்றுமாய், மரமுமாய் நின்று புனல் காலே உண்டியாய் கொண்டு தவம் செய்தார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு நாய்போன்றவனாகிய என்னை ஆண்டுகொண்டான். இது கண்ட பலர் நகைத்தார்கள். இத்தகைய தன்மை உடையவன் அவன் என்பதை அறிந்து அவனைச் சார வேண்டும் என்ற தளராத ஊக்கத்தோடு இருப்போர்தமக்கு ஒரு வார்த்தை, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இதோ கூறுகிறேன். உங்கட்குப் பொறி புலன்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். சாதகர்களாக உள்ளவர்கள் அப்புலன்களில் எக்காரணம் கொண்டும் புகவே வேண்டா. அப்படியானால் அந்தப் பொறிபுலன்களையும் அவற்றிற்கு அடிப்படையான மனத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? பொறி புலன்கள் சும்மா இராவே என்று சிந்திக்கிறீர்களா? இதோ