பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையா என்ற விவாதம் எழுகிறது. கவிதையில் தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல் என்னும் அகப் பொருள்துறைப் பாடல் அது. குறுந்தொகையில் வரும் பாடல் அது. வண்டைப் பார்த்துத் தலைவியின் கூந்தலில் மணம் சிறந்தது என்று பாடும் பாடல் அது. பொருட்குற்றம் என்று நக்கீரன் சாட அது வழு அமைதி என்று விளக்கம் தரப்படுகிறது.

சங்கம் தோன்றிய கதையும், சங்கப் புலவர் வீற்றிருந்து ஆய்வதும் மிகச் சிறப்பாகக் கூறப்படுகின்றன. எனவே மதுரைக்குப் பெருமை தமிழ் வளர்த்ததால் ஏற்பட்டது என்று விவரித்துக் கூறப்படுகிறது.

இறுதியில் திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகர் செய்த கோயில் திருப்பணியும், அதனால் பாண்டியன் அவரைக் கடுமையாகத் தண்டித்ததும், இறைவன் வைகையில் வெள்ளம் ஏற்படுத்திச் சேதம் ஏற்படுத்துவதும், வந்திக்குக் கூலியாளாகச் சென்று பிரம்படிபட்டதும் சுவைமிக்க நிகழ்ச்சிகளாக அமைகின்றன.

ஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளிச் சமணரோடு வாதிட்டு அவர்களை வென்ற செய்திகளும் கூறப்படுகின்றன. எனவே பாண்டிய அரசர்களின் பணி, தமிழ் வளர்ச்சி, சைவம், மதுரைக் கோயில் வளர்ச்சி இவற்றை வைத்து இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றிற்கு உரைநடை வடிவம் இதில் தரப்பட்டுள்ளது. கதைச் சிறப்பால் இந்நூல் வரவேற்புப் பெறும் என்ற நம்பிக்கை உளளது.

ரா. சீனிவாசன்