பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



32. வளையல் விற்ற படலம்

தேவதாரு என்னும் வனத்தில் இருந்த ரிஷிகளின் பத்தினியர் அப்பு அழுக்கற்றவர்கள் என்று திமிர் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு நேரும் போது அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்ட இறைவன் அவர்கள் முன்னால் பிச்சை எடுக்கும் வாலிப வடிவுடன் ஆடைகள் இன்றி வெறும் கோவணத்துடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக்கொண்டு வாயில் புன் முறுவலும் காலில் கிண்கிணியும் செருப்பும் அணிந்து கையில் பிச்சைப்பாத்திரம் ஏந்தி, அடிக்க உடுக்கையும் கொண்டு பாடிக் கொண்டே தெருவழியே சென்றார். சிலம்பொலியும் உடுக்கை ஒலியும் கேட்டுச் சோறு ஏந்திய கையோடு பிச்சைக்காரனை நாடி இச்சை மீதுார நச்சினார்கள்.

அவர் பேரழகைக் கண்டு நாணம் கைவிட்டுக் கூந்தலும் ஆடையும் நெகிழப் பசலை மீதூர வளையல்கள் கழலத் தம் வசம் இழந்து அவரை அடைய ஏங்கித் தவித்தனர். மோகம் கொண்ட அவர்கள் தம் கணவர் காண அவமானப்பட்டுப் போனார்கள். பிச்சை எடுக்க வந்த பெருமான் அவர்களைத் தூண்டி விட்டு அவர் வீட்டு எல்லையைத் தாண்டி மறைந்துவிட்டார்.

ரிஷிகள் தம் மனைவியர் இப்படி மன நிலை மாறி நிற்பதற்குக் காரணம் என்ன என்று எண்ணிப்பார்த்தனர். பிச்சைக்காரன் பின்னால் இவர்கள் இச்சை கொண்டு போனார்களே என்று அவர்களைக் கடிந்து கொண்டனர். நிச்சயம் அவன் சிவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். "நீர் ரிஷிபத்தினிகளாக இருக்கத் தக்கவர்கள் அல்லர். சோமசுந்தரனை விரும்பிச் சிவன் பின்னால் போனிர்கள். அவன் மாணிக்கம் விற்ற