பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

திருவிளையாடற்புராணம்

போது வைசியனாக வந்தான்; நீங்களும் மதுரை செட்டித் தெருவில் சென்று பிறப்பீர்" என்று சாபம் இட்டனர். விமோசனம் யாது?' என்று கேட்டனர். "அவன் வளையல் விற்க வருவான். அவன் உங்கள்கையைப் பிடிப்பான்; நீங்கள் சாப விடுதலை பெறுவீர்" என்று கூறப்பட்டார்கள்.

அதன்படி மதுரையில் செட்டித் தெருவில் வணிகக் குடிகளில் இவர்கள் பிறந்தார்கள். பெதும்பைப் பருவம் நீங்கி மங்கைப்பருவம் அடைந்த இவர்கள் தெருவில் வளையல் விற்கும் வாலிபனின் குரல் கேட்டு வாயிற் கடைகளைக் கடந்து அவனை விளித்தார்கள். வளையல் விற்பவனின் பேரழகைக் கண்டு தம் மனம் பேதலித்தனர். அவனை அடைந்து இன்பம் அடைவது பிறவிப் பயன் என்று நினைத்தனர்.

"நீ யார்?" என்றார்கள்.

"வளைக்கும் வியாபாரி" என்றான்.

"இளைக்கும் எங்கள் கை அளவிற்கு ஏற்ப வளையல் உண்டோ?" என்று வினவினர்.

"உண்டு" என்றான்.

கைகளை நீட்டினர்; அவன் அவர்கள் கையைப் பிடித்து வளையல்களை மாட்டினான்.

கைபிடித்துக் கணவனாக அவன் மாறினான். அவன் சிவன் என்பதை அவர்கள் அறிந்திலர்; பிச்சை ஏற்க வந்த பிச்சாடனர்தான் வளையல் விற்க வந்த வாலிபன் என்பதும் அறியார்.