பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விறகு விற்ற படலம்

119

வாய்க் கொழுப்பால் வம்பினை விலைக்குப் பேசி வாங்கி விட்டோம். நாளை இசைப் போட்டியில் கலந்து கொள்வதை விடத்தவறான செய்கை வேறு இருக்க முடியாது. இருள் அகலும் முன் நாம் அனைவரும் அகன்று போய் விடுவதுதான் அறிவுடைமை என்று தீவிரமாகச் சிந்தித்தான்.

தன் சீடர்களிடம் தான் கேட்ட இசையின் பெருமையை வாய்விட்டுப் பாராட்டிக் கூறினான். அவர்கள் துட்டைக் காணோம், துண்டைக் காணோம் என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறச் செயல் பட்டார்கள். மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கட்டிக் கொண்டு இரவோடு இரவாய் அரசனிடமோ ஆத்தான அதிகாரிகளிடமோ எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வடபுலம் நோக்கி வந்த வழியே கம்பி நீட்டினர்.

அன்றிரவு பாணபத்திரன் கனவில் இறைவன் வந்து நடந்ததைக் கூறி "இனி ஏமநாதன் இசை வாதுக்கே வரமாட்டான்" என்று அறிவுறுத்தினார். பாணபத்திரனுக்கு அடிமை என்று சொல்லி விறகு ஆளாய்ச் சென்றதை எடுத்துச் சொல்லினார். அவன் அஞ்சி ஊரைவிட்டே ஓடி விட்டதையும் கிளத்தினார்.

பாணபத்திரன் இறைவன் தனக்காக விறகு சுமக்க நேர்ந்ததே என்று வருந்தினார். தமிழ் நாட்டின் இசைப் பெருமையைக் காக்க இறைவன் செய்த ஆக்கத்தைக் கண்டு இறும்பூது எய்தினான். அவர் விறகு சுமந்ததை விடத் தான் தோல்வியைச் சுமந்து இருக்கலாமே என்று கூறி வருந்தினான். ஏமநாதன் சென்றான் என்பதைவிடச் சோமநாதன் விறகு சுமந்தான் என்பது கேட்கவே சோகமாக இருக்கிறதே என்று துக்கித்தான்.