பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

திருவிளையாடற்புராணம்


மன்னன் கோல் கோடினால் அங்கே தெய்வம் தங்கி நிலைத்து இருக்காது. தெய்வம் வாடல் கொண்டு கூடல் நகரை விட்டு வெளியேறியது. கோயில் சிவலிங்கம்; இடம் பெயர்ந்து விட்டது. மதுரை நகரை விட்டு வெளியேறிவிட்டது. திருக்கோயிலுக்கு நேர் வடக்கே வைகையாற்றின் தெற்குப் பகுதியில் ஒரு புது ஆலயம் எழுப்பி அங்குத் தானும் மீனாட்சி அம்மையும் குடி பெயர்ந்தனர். சங்கப் புலவர்களும் உடன் சென்று அங்குச் சங்கத்தை மாற்றிக் கொண்டனர்.

வழிபட வந்தவர்கள் பழைய கோயிலுக்குள் இருந்த சிவலிங்கத்தைக் காணாமல் திகைப்புற்றனர். செய்தி அறிந்த அரசன் உய்தி அடைவது எப்படி என அலமரல் உற்றான். தான் செய்த தவற்றை உணர்ந்து இடைக்காடனை மதிக்காததால்தான் விடையேறு உகந்தோன் நடை காட்டினார் என்பதை அறிந்தான். புதுக்கோயில் இருந்த இடத்துக்கு விரைந்து ஓடிச் சென்று அங்குக் குடிகொண்டிருந்த தெய்வக்கோமகனைக் கண்டு தரிசித்துப் பாடல்கள் பல பாடி வழிபட்டுத் தன் வழிக்கு வர அழைத்தான்.

இத்தலம் உத்தர ஆலவாய் என்று இனிப் புதுப்பெயர் பெறும்; கடம்ப வனத்திலும் உறைவோம்; இப்புதிய தலத்திலும் தங்குவோம்; கவலற்க; அவலம் நீங்குக இடைக்காடன் இடம் பெறாத மதுரையில் எனக்கு என்ன வேலை? அதனால் தான் வந்துவிட்டேன்; நீ கற்றவனாக இருக்கலாம்; அதனால் நீ உற்ற பெருமையால் மற்றொரு கவிஞனை மதிக்காதது தவறு; இடைக்காடன் உன்னோடு நேரில் மோத முடியாது; புலவர்கள் எல்லாரும் நக்கீரனாக இருக்க முடியாது" என்றார்.