பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

157


திருப்பெருந்துறை என்ற கடற்கரைப் பட்டினம் சென்று அங்கே இறங்கும் வெளிநாட்டுக் குதிரைகளை வாங்கிவரத் தக்கவர் திருவாதவூரரே என்று முடிவு செய்யப்பட்டது.

அவர் மனமெல்லாம் திருப்பெருந்துறைக்குச் சென்று அங்கே கோயில் திருப்பணி செய்வதிலேயே சுழன்றது.

பொருட் பெட்டகத்தின் திறவு கோலைத் தந்து வேண்டிய பொன்னையும் பொருளையும் எடுத்துப் போகவும் என்று கூறி அரசன் அனுப்பினான்.

திருப்பெருந் துறையில் குருந்த மரத்து நிழலில் ஞானகுருவாக இறைவன் அமர்ந்திருந்தார். சீடர்களும் சுற்றி நின்று கொண்டிருந்தனர். வாதவூரர் ஞானகுருவாக வந்த மோனத் தவசியை வணங்கி மன இருள் நீங்கப் பெற்றார்; அவரைக் கண்டு ஞான உபதேசம் பெற்ற பின் அக்குருந்த மரத்தை நாடி மறுபடியும் சென்றார். தாம் கண்ட ஞானியரின் திருவுருவைக் காணமுடியவில்லை. காதலனிடம் நெஞ்சைப் பறி கொடுத்த காதலியின் நிலை அவருக்கு ஏற்பட்டது. ஞான தேசிகனைக் காணாமல் அவர் மனம் சுழன்றது. பித்தம் பிடித்தவர் போல் சுற்றிச் சுற்றி வந்தார்.

கொண்டு சென்ற பொருள் தெய்வத் தொண்டுக்குப் பயன்பட்டது; செலவழித்த பொருளுக்குக் கணக்கு வைக்கவில்லை. அரசனின் பொன்னும் பொருளும் ஆபரணங்களும் கல்லும் சிற்பமும் ஆக உருவெடுத்தன.

அரசன் தந்த காலக் கெடுவும் தீர்ந்தது; பணியாட்கள் அவரை நினைவுபடுத்தினர். குதிரைகள் வாங்காமல் எப்படித் திரும்புவது என்ற வினாவை எழுப்பினர்.