பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நரி பரியாக்கிய படலம்

159

என்று விசாரித்தான். அவர் "இன்று முதல் மூன்று நாட்களில் அவை வந்து விடும்". என்று கூறி அவை நிற்றற்குக் கொட்டகைகளையும், குடித்தற்கு நீர்த் தொட்டிகளையும், கட்டி வைக்கக் கயிறுகளையும் தயாரித்து வைக்கச் சொன்னார்.

அவர் குறிப்பிட்ட மூன்று நாட்களும் கழிந்தன நம்பிக்கை இழந்து அரசன் அவரைக் கட்டி இழுத்து வந்து ஒறுக்குமாறு கட்டளை இட்டான்.

கொலையாட்கள் அவரை இழுத்து வந்து அவர் மீது கற்களை அடுக்கி வைத்துச் சுமை ஏற்றினர், சொற்களைக் கடுமையாக்கி வருத்தினர். கால்களில் விலங்கிட்டு இழுத்துச் சென்றனர். கைகளில் கிட்டி இட்டு இறுக்கினர். அவர்கள் கடுமையான தண்டனைக்கு அஞ்சாது இறைவனை நினைத்து அவர் திருவடிகளே சரணம் என்று செயலிழந்து நின்றார். இறைவன் திருவருளால் அவரை அவர்கள் எவ்வளவு வாட்டினாலும் அவர் அதனால் பாதிக்கப்படவில்லை.

அதற்கு மேலும் காலம் தாழ்த்தக் கூடாது என்று இறைவன் கருணை கூர்ந்து ஆடி முடிவதற்குள் அன்று மாலைப் பொழுது காட்டில் உள்ள நரிகளைப் பரிகளாக்கி (பரி-குதிரை) கண நாதர்களைக் குதிரைச் சேவகர்களாக மாறச் செய்து, தானும் அவர்களுள் ஒருவனாகத் தலைமை தாங்கிக் குதிரைகளோடு நகர் வந்து சேர்ந்தார். வரவை எதிர்பார்த்த அரசனுக்கு அக்காட்சி துயர் தீர்க்கும் மருந்து ஆகியது.

குதிரை வீரர்களுள் தலைமை தாங்கி வந்த இறைவன் அக்குதிரைகளை அரசனிடம் சேர்ப்பித்தார். "அரசனே!