பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

திருவிளையாடற்புராணம்


ஊர்க் காவலர்கள் கடுக ஓடி அரசுக் காவலனிடம் இச்செய்தியை உரைத்தனர். பரிகள் என்று கட்டி வைத்த குதிரைகள் மாயமாய் மறைந்து விட்டன. அவை உருமாறி நரிகள் ஆகிவிட்டன. அவை ஏற்கனவே கட்டி வைத்திருந்த குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டன. ஊரில் புகுந்து உயிர்களைக் கொன்றுவிட்டன. அவை அனைத்தும் காடு நோக்கி ஓடி விட்டன. முடமும் கிழமும் மட்டும் கட்டுக்குள் இருக்கின்றன" என்று கூறி முறையிட்டனர்.

நடந்தன எல்லாம் கனவோ களவோ என்று அறியாமல் அச்சமடைந்நான்; வாசகர் உரைத்தவை யெல்லாம் மோசடி என மதிப்பிட்டான். பித்தளையைப் பொன்னாக்கித் தருவோம் என்று சொல்லும் மோசடி வித்தையைப் போன்றது இது எனக் கருதினான். கொண்டு சென்ற பொன்னைக் கொட்டி அழுது விட்டுக் காட்டு நரிகளைக் கட்டிப்பிடித்து ஆடிய நாடகம் இது என மதித்தான். வந்தவர் அனைவரும் மோசடி செய்யும் வேடதாரிகள் என்று கணித்தான். குட்டிமத்தான் சாத்தான் கண்கட்டி வித்தை இது என்று முடிவு செய்தான்.

எல்லாம் இனிதே முடிந்தது என்று கதையை எழுதி வைத்து ஏடுகளை மூடி வைக்கும் எழுத்தாளனைப் போல அமைதியாக மன நிறைவோடு உறங்கி விழித்து எழுந்த மாணிக்க வாசகரைக் கட்டி இழுத்து வந்து காவலன் முன் நிறுத்தினர். அரசன் கடுஞ்சினத்தோடு ஏவலர்களுக்கும் ஆணை இட்டான். இவன் கொட்டி வைத்த பொன்னைக் கோயில் கட்டி வைக்க ஒழித்துவிட்டுக் காட்டு நரிகளை ஒட்டு குதிரைகளாக மாற்றிக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறான். கொண்டு சென்ற பொன்னை மீண்டும் வந்து நிறுத்தும் வரைக் கடும் வெய்யிலில் நிறுத்திக் கால் கடுக்கச் செய்து கோல் கடுக்க அடித்துக் கக்க வையுங்கள்.