பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

179

விளையாடச் சென்றவர்கள் விளையாட்டில் வினையை வருவித்துக் கொண்டார்கள். மூத்தவளின் பிள்ளைகள் இளையவனை அடித்துவிட்டார்கள்.இளையவள் "அய்யோ குய்யோ என் மகனை அநியாயமாக அடித்துக் கொல்கிறார்களே" என்று ஒப்பாரி வைத்தாள். சிண்டு முடித்துக் கொண்டு இருவரும் சண்டைக்கு நின்றனர்.

"ஒண்ட வந்த பிடாரி நீ; இங்கே உனக்கு இங்கே அண்ட என்ன உரிமை இருக்கிறது. கட்டியவள் நான்; ஒட்டியவள் நீ; எங்கேயோ தெருவில் பொறுக்கிக் கொண்டிருந்த சிறுக்கி நீ; உனக்கு என்னடி இந்தக் கிறுக்கு, நாலுபேர் அறியத் தாலி கட்டிக் கொண்டு வந்தவள் நான்; நீ திருட்டுத் தாலி கட்டிக் கொண்டு மினுக்குகிறாய்; எனக்கு உரியவனை மயக்குகிறாய்.

கட்டியவளாக இருந்திால் நீ அதற்குச் சான்று காட்ட முடியுமா? எங்கே மணம் நடந்தது? எப்படி நடந்தது? சான்று உண்டா? மரியாதையாக நீயும் உன் மகனும் வீட்டை விட்டு வெளியேறிவிடுங்கள்; கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன்" என்று அவள் வசை மாரி பொழிந்தாள்.

"திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை" என்ற பழமொழிக் கேற்ப மதுரைச் சொக்கரிடம் சென்று இளையவள் முறையிட்டாள்.

"நீ கவலைப்படாதே! மணம் செய்து கொண்ட போது சான்றாக நின்ற மூவரும் வருவர்" என்று இறைவன் வாக்குச் சாற்றியது.