பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

திருவிளையாடற் புராணம்

அனுப்பியது. விரைவில் அப்பணிகளைச் செய்து முடித்து விட்டு விண்ணுலகம் வருவதாகச் செய்தி சொல்லி அனுப்பியது.

சிவலிங்கத்தின் மேற்குத் திசையில் தீர்த்தக் குளம் ஒன்றைத் தன் கூரிய கொம்புகளால் வெட்டித் தன் துதிக்கையால் மண்ணை வாரிப்போட்டு அழகிய கரை அமைத்துக் கட்டி முடித்தது. அதன் அருகே சிவனுக்கு ஒரு ஆலயமும் விநாயகர்க்கு ஒரு கோயிலும் அமைத்து வைத்தது. அதன்பின்னர்க் கிழக்குப் பக்கம் ஐராவதம் என்ற பெயரில் ஒரு நகரை உண்டாக்கி அங்கும் தன் தலைவன் பெயரால் 'இந்திரேச்சுவரம்' என்ற சிவன் கோயில் ஒன்று நிறுவியது. அது வைகையின் தென் கரையில் உள்ளது. இவ்விரு பணிகளையும் செய்துமுடித்து இந்திரன் அழைப்பை ஏற்றுத் தன் சொந்த நகருக்குத் திரும்பிச் சென்றது.

வெள்ளை யானை ஏற்படுத்திய இந்த மூன்று கோயில்களிலும் பக்தர்கள் சென்று வழிபட்டுப் பயன் அடைந்தனர். யானை வெட்டிய குளத்தில் நீராடி மேற்கே உள்ள சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டுப் பின் கிழக்கே சென்று யானை சென்ற வழியே வைகையை அடைந்து அதில் நீராடி இந்திரேச்சுரவரையும் வழிபட்டுப் பயன் அடைந்தனர்.

இந்திரன் கண்டெடுத்த விமானம் எழுப்பிய திருக்கோயில், அதனை அடுத்து யானை எடுத்த கோயில்கள் மக்களை ஈர்த்தன.