பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


3. திருநகரம் கண்ட படலம்

கடம்ப வனத்தின் கிழக்கே மணலூர் என்னும் ஊர் உள்ளது. அதனைத் தலைநகராகக் கொண்டு பாண்டியன் குலசேகரன் என்பவன் அறம் வழுவாமல் மனு நெறிப்படி ஆட்சி நடத்தி வந்தான். அவன் வாழ்ந்த நகரில் வணிகன் ஒருவன் செல்வச் சிறப்போடு வாழ்ந்து வந்தான். அவன் செல்வச் சிறப்புக் கேற்ப அவன் பெயரும் தனஞ்சயன் என்று வழங்கப்பட்டது.

அவன் வாணிபம் செய்யும் பொருட்டுத் தன் சொந்த ஊரை விட்டு மேற்குப் பக்கம் பயணம் ஆனான், தன் வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்வழியில் இருட்டியது. கடம்ப வனத்தில் அகப்பட்டுக் கொண்டான், மனித சஞ்சாரமற்ற அக் காட்டில் தன்னந்தனியாக இருக்க வேண்டி இருந்தது. தெய்வம்தான் துணை என்று அங்கே அங்குமிங்கும் உழன்றான். எதிர்பாராதபடி இந்திரன் அமைத்த விமானத்தின் கீழ்ச் சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. ஒளியோடு விளங்கிய அத் தெய்வத் தலம் அவனுக்கு ஆறுதல் அளித்தது. அதனை வழிபடும் முயற்சியில் இரவினைக் கழிக்க முற்பட்டான்.

நள்ளிரவில் கள்வர்கள் வரும் நேரத்தில் புதியவர்கள் யாரோ அங்கு வந்து கூடுவதைப் பார்த்தான்; அவர்கள் மானுடர்கள் அல்லர், தேவர்கள் என்பதை அறிந்தான்; அவர்கள் பூஜைக்கு வேண்டிய மலர்களோடும் மணம் நிறைந்த பொருள்களோடும் வந்து நான்கு வேளையும் பூஜை செய்வதைப் பார்த்தான். தானும் அவர்களுக்கு மலர்கள் கொண்டு வந்து உதவினான்.