பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தடாதகைப் பிராட்டி திருவவதாரப் படலம்

33

காலையில் விழித்து எழுந்ததும் சிவனை நினைத்து வழிபட்டே தன் கடமைகளைச் செய்யத் தொடங்கினாள். சோமசுந்தரர் திருக்கோயிலுக்குச் சென்று விதிப்படி வலம் செய்து வணங்கி வழிபட்டு வந்தாள். அநிந்திதி கமலினி என்று தெய்வத் தோழியர் இருவரும் மானுட வடிவம் தாங்கி அவளுக்கு அணுக்கத் தொண்டராகப் பணியாற்றினர். அவ்வாறே திருமகளும், கலைமகளும் பிறவி எடுத்து இறைவியாகிய தடாதகைக்குப் பணிவிடை செய்தனர். நாடு கல்வியும் செல்வமும் பெற்று ஓங்கியிருந்தது. சேரனும் சோழனும் அம்மையாரின் அடிகளை வணங்கி இட்ட ஏவல்களைப் பணிவுடன் செய்து வந்தனர். பாண்டிய நாடு கன்னி நாடு என்றும் வழங்கப்பட்டது.

கயிலையில் சிவனோடு ஒரு பாகமாக இருந்து வரும் உமையம்மை ஒரு முறை தக்கன் மகளாக அவதரித்தார். அதே போல இமவானும் தவம் செய்து பார்வதியைப் பெற்றான். இருவரும் அவர்கள் செய்த தவப்பேற்றினால் உமையாரை மகளாகப் பெற்றனர். இங்கு இவர் மானுட மகளாகப் பிறந்தது பெரிதும் வியப்பைத் தந்தது. புதுமையாகவும் இருந்தது. அதற்குக் காரணம் என்ன? அதற்கு ஒரு வரலாறு பின்னணியாக இருந்தது. அதனை அகத்தியர் எடுத்துச் சொல்ல ஏனைய முனிவர்கள் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

விசுவாவசு என்னும் வித்தியாதரனுக்கு ஒரு மகள் இருந்தாள்; அவள் பெயர் வித்தியாவதி என்பதாகும்; பெயருக்கு ஏற்ப அவள் பல கலைகளையும் கற்றவளாக இருந்தாள். அவள் உமையம்மையிடம் மிக்க அன்பும் ஈடுபாடும் கொண்டிருந்தாள். தன் தந்தையை நோக்கித் தான் உமையாளிடத்து நெருங்கிய அன்பு காட்ட