பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணப்படலம்

37


குதிரை, தேர், பிறைநுதல் அழகியர் இவர்களைத் திறையாகப் பெற்றாள். இந்திரனை நோக்கிப் படை செல்ல அவன் எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் விலகிச் சென்றான். வனப்புமிக்க மங்கையரையும், வெள்ளை யானையையும், தெய்வத் தருக்களையும் கவர்ந்து மீண்டாள். இவ்வாறே மற்றைத் திசைக் காவலர் யாவரையும் அவர்கள் ஆண்மை இழக்கச் செருச் செய்து திறையும் கைக் கொண்டாள். மேரு மலையையே வில்லாகக் கொண்டிருந்த சிவபெருமான் இருக்கும் கயிலையை நோக்கிச் சென்றாள். சிவகணங்கள் எதிர்த்துத் தோற்று ஓடின. பின் சிவபெருமானே நேரில் வந்தார் ஒற்றைக் கழல் அணிந்த திருப்பதமும், பாம்பு அசைத்து, உடுத்த வெம்புலித் தோலும், மழுக்கரமும், வெண்ணிறு அணி கோலமும், நூல்மார்பும், கற்றைச் சடையும், தன்னையே நோக்கிய கருணை செய் இரு நோக்கும் கொண்ட தன் வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டி எதிர் கண்டாள்.

கண்டபோதே ஒரு முலை மறைந்தது. உள்ளத்தில் நாணம், மடம், அச்சம் தோன்றப் பண்டைய அன்பு வந்து ஆட்கொண்டது; கருங்குழல் சுமை பிடரியில் தாழக் கெண்டை போன்ற உண்கண்ணால் புறவடி நோக்க, மண் கிளைத்து மின் என நின்றாள். நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் கழுத்தினைக் கொண்ட அப்பாவை தன் மனமாற்றத்தைக் கண்டு திகைத்தாள், அன்று அகல் விசும்பிடை எழுந்த அசரீரி கேட்டு அறிந்த மூதறிவாளன் ஆகிய சுமதி என்னும் அமைச்சன் அம்மையார் அடிபணிந்து "அன்னாய் இக்கொன்றையஞ் சடைக் குழகனே நின் மன்றலுக்கு உரிய மணவாளன்" என்றான்.