பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

திருவிளையாடற் புராணம்

நிதானமாக ஒரு குழந்தை பிறந்தது. கவுரி என்பது அவள் பெயர்; இளம் வயது முதல் சிவனிடம் சிந்தை கொண்டு சைவ நெறியினைப் போற்றி வழிபட்டு வந்தாள். மணப்பருவம் வந்தது. மனத்துக்கு உகந்த மணாளன் அமையவில்லை; அதனால் பெற்றோர் வருந்தி இருந்தனர்.

வேதியர் குலத்து இளைஞன் ஒருவன் இவர்கள் வீட்டுக்கு விருந்தினனாக வந்தான். கோத்திரம் குலம் விசாரித்துச் சாத்திரப்படி அவனுக்கு மணம் முடிப்பது என்று நிச்சயித்தனர். மதம் மட்டும் மாறுபட்டிருந்தது; வைணவ குலத்தைச் சார்ந்தவன்; இம்முரண்பாடு ஒத்துப் போவதாக இல்லை; எனினும் நிச்சயித்த அவனை உதறித் தள்ள இயலவில்லை.

இருவருக்கும் திருமணம் நடந்தது; வாழ்க்கைப்பட்ட இடத்தில் சிக்கல் ஏற்பட்டது; அவளை அவர்கள் மதித்து நடத்தவில்லை. வீட்டை விட்டு வெளியேறும் போது அவள் சமையல் கட்டுக்குப் போகாதபடி தடுக்கப் பேரறையில் விட்டுப் பூட்டி வைத்தனர். அவள் கையால் சமைக்கக் கூடாது என்பது அவர்கள் விதி.

சிவனடியாருக்குச் சோறு போட்டுப் பழகிய அவள் இப்பொழுது வெறும் சடமாக அறையில் கிடப்பதை வெறுத்தாள். அவள் விழிகள் சிவனடியார் யாராவது வருவார்களா என்று தேடின. எதிர்பார்த்தபடி வயது முதிர்ந்த சிவனடியார் ஒருவர் பசியால் இளைத்து இவள் வீட்டுப்படியில் காலடி எடுத்து வைத்தார்.

வெளிக்கதவைத் திறந்து அவரை உள்ளே விட்டாள்.

சமைக்க முடியாதபடி பூட்டும் தாளும் அவளைத் தடுத்து நிறுத்தின. சிவனடியார் இதை உணர்ந்து