பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

திருவிளையாடற்புராணம்

மாந்தருக்கு மருந்து அளித்தும் அவர்கள் துயரை நீக்குமாறு வேண்டினான். சிவன் தன் திங்கள் திருமுடியிலிருந்து அமுதத் துளிகள் சிலவற்றை அந்நகரில் தெளித்துச்சோர்ந்த அவர்களுக்கு உயிரளித்துக் காப்பாற்றினார். மறுபடியும் அந்நகர் இம்மதுரத்துளிகள் பட்டு இனிமை அடைந்து மதுரை என்னும் பெயருக்கு உரிய தகுதியைப் பெற்றது. யாவரும் விடம் நீங்கி உமை பாகனை வழிபட்டு மேன்மை அடைந்தனர். பாண்டியனும் தெய்வ அருள் நினைத்து உருகித் துதித்து நன் முறையில் ஆட்சி நடத்தி நாள் பல வாழ்ந்து மேன்மை உற்றான். 

29. மாயப் பசுவை வதைத்த படலம்

யானையை ஏவியும் பயன் இல்லை; நாகத்தினை அனுப்பியும் பயனில்லை; அவர்கள் கொல்ல முடியாத சீவனை அனுப்பி வைக்க வேண்டுமென்று சமணர் நினைத்தனர். பசுவை அனுப்பினால் அதைக் கொல்லத் தயங்குவர் என்று முடிவு செய்தனர். அதனால் அழிவு வேள்வி ஒன்று இயற்றி அதில் முரட்டுப் பசுவடிவத்தில் ஓர் அசுரனைத் தோற்றுவித்தனர். இட்ட பணியாது என்று பசுவின் வடிவத்தில் இருந்த அசுரன் கேட்டான். பாண்டியன் அனந்தகுணனையும், ஆனந்தம் மிக்க நகர மாந்தரையும் அழிக்க வேண்டும் என்று கட்டளை இட்டனர். அந்த முரட்டுப்பசு தன் கூரிய கொம்புகளைக் கொண்டு வீரியமாகப் போர் செய்யும் வேகத்தோடு மதுரையை நோக்கி ஓடியதும் அரசனும் மக்களும் அஞ்சி அலறி அங்கயற்கண்ணியின் தலைவனாகிய சுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டனர்.

சமணர் திட்டத்தை முறியடிக்கச் சிவனார் தன் இடப வாகனத்தை ஏவி அதனை அடக்குமாறு பணித்தார். களை வடிவத்தில் வந்த எருதினைக் கண்டு கன்னி இளம்