பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

99


(இ - ள்) பெறுதற்கரிய மனித்தப் பிறவியைப் பெற்ற மக்கள் சிவனையடைவதற்கு உரிய சிவதன்மங்களுள் செயற்கரிய வல்வினையும் செயற்குரிய மெல்வினையும் ஆகிய இப்பணிகளுள் ஏதேனும் ஒன்றைச் செய்தலும் இவற்றுள் எதனையுஞ் செய்யாது தன் செயலற நிற்றலும் மெய்ப்பொருளைச் சிவயோக நெறியிற் கண்டு பூவலரும் இதயத்துப் பொருளோடு பொருந்தியிருத்தலும் ஆகியவற்றுள் ஒன்றினைமேற் கொண்டு பெறுதற்கரிய சிவானந்தத்தைப் பெறாது நிலையாத இவ்வுலகிற் சுகதுக்கங்களாகிய அல்லல் விளக்கும் போகங்களை நுகர்ந்து கொண்டு தம் வாழ்நாளை வீணாக்குவது என்ன பேதைமையோ? கூறுவாயாக எ - று.

இப்பொருள்கள் என்றது, மேற்குறித்த சிவதன்மங்களாகிய வல்வினை மெல்வினைகளை. எப்பொருளுஞ் செய்யாதொழிந்திருத்தல் என்றது, செய்யாமை செய்து செயலறுத்தலை. மெய்ப்பொருளைக் கண்டிருத்தல் என்றது, செம்பொருளாகிய சிவத்தைச் சிந்தையிற் கொண்டு ஒன்றியிருத்தலாகிய சிவயோக நெறியினை. கண்ட மனிதர் என்றது, யாக்கை, இளமை, செல்வம் என்பன என்றும் நிலையாதன என்னும் உலகியல்பினக் கண்டுணர்ந்த பகுத்தறிவுடைய மக்களை. உண்டிருத்தல் என்றது, தம்மைப் பிணித்துள்ள பாசப்பிணிப்பினை நீக்குதற்குரிய உபாயத்தினை மேற்கொள்ளாது உலக நுகர்ச்சிகளிற் சிக்குண்டு கிடத்தலை. என்னோ - என்ன பேதைமையோ?

“ஞானத்துக்குப் பக்குவரல்லாத ஆன்மாக்களை நோக்கி அருளிச் செய்த இதுவும் சர்வான்மாக்களுக்குங் கிட்டாதபொருள் உன்னுடைய பாக்கியத்தினாலே கிட்ட, இதனைக் கைவிட்டு, வாதனையைக் கைவிடாமல் நின்று, இந்திரிய அடிமையாய்ப் பேறிழந்து போகாதே; இந்தவுண்மையிலே இடைவிடாமல் நின்று சாதித்தற்பொருட்டு அந்நியோபதேசமாகப் (பிறரைக் குறித்துக் கூறுவது போல) மாணவனை நோக்கி அருளிச்செய்ததெனக் கொள்க” என இப்பாடற் பொருளை விளக்குவர் தில்லைச் சிற்றம்பலவர்.


௩௰. வீட்டி லிருக்கிலென் னாட்டிலே போகிலென்
கூட்டில்வாள் சாத்திநின் றுந்தீபற
கூடப் படாததென் றுந்தீபற.

இது, தற்போதத்தைவிட்டு அவனருள்வழி நின்று கூடும் உபாயத்தை இடைவிடா துணரப்பெறின் அம்முதல்வனைத் துறவறம் இல்லறமாகிய எல்லா நிலையிலும் கூடியின்புறலாம் என்கின்றது.

(இ-ள்)திருவருள் ஞானத்தைத் துணையெனக் கொள்ளாது எல்லா வற்றையுந் துறந்து ஒழுகுதலாகிய துறவறத்தில் நின்றால் என்ன