பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


துறவாது மனையறத்தில் நின்று நாடத்தக்க அருச்சனை முதலியவற்றிலும் மூர்த்தி தலம் தீர்த்தமாகிய தரிசனங்களிலும் உழன்றாலென்ன? ஆன்மாவாகிய வுறையினுள்ளே திருவடி ஞானமாகிய வாளினைச் சாத்தி நிற்பாயாக. இவ்வாறு திருவருளைத் துணைக்கொண்டு நின்றாலன்றி வேறு எவ்வகையாலும் சிவாநுபவமாகிய அந்நிலை கூடப் பெறாதென்றுணர் வாயாக. எ-று.

வீடுபேற்றிற்குக் காரணமாகிய துறவறத்தினை வீடு என்றார். நாட்டு மக்கள் பெரும்பாலோர் மேற்கொள்ளும் மனையறத்தினை நாடு என்றார். கூடு-உடம்பு. வாள் என்றது, திருவருள் ஞானமாகிய வாட்படையினை. “ஞானவாள் ஏந்தும் ஐயர்” என்பது திருவாசகம். திருவடி ஞானமாகிய திருவருளின் துணையின்றி இறைவனையடைதல் இயலாது என்பார், “கூடப்படாதுஅது” என்றார். உயிருணர்வாகிய உறையினுள்ளே திருவடி ஞானமாகிய வாட்படையினைச் செறித்து நிற்பார்க்கே துறவறம் இல்லறம் எனப் பகுத்து உரைக்கப்படும் எவ்வகை யறங்களும் நற்பயன் விளைவிக்கும் என்பதாம்.

இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைப்பது, பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும்.


63. வீட்டிலே சென்று வினையொழிந்து நின்றிடிலென்
நாட்டிலே நல்வினைகள் செய்திடிலென்-கூட்டில்வாள்
சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்விசெய்த
மாத்திரமே யாங்கண்டாய் வந்து.

(இ-ள்) வீடுபேற்றுக்குக் காரணமாகிய துறவறத்திலே இருவினையும் ஒழித்து நின்றாலும் நாட்டிற் பயிலும் இல்லறத்திலேயிருந்து நல்வினைகளைச் செய்தாலும் ஆன்மாவாகிய வுறையுள் திருவடிஞானமாகிய வாட்படையினைத் தாங்கி நில்லாயாயின் தக்கனார் ஆன்ம போதத்தாற் செய்த நல்வினையாகிய வேள்வி தீவினையாய் முடிந்தாற்போன்று தற்போதத்தாற் செய்தன யாவும் தீவினையாய் வந்து முடியும் என்று உணர்வாயாக. எ-று.

இங்கு வாள் சாத்துதல் என்றது, வாட்படையைத் தாங்கி நிற்றலை. 'கூட்டில் வாள் சாத்தி' எனவருந் திருவுந்தியார் தொடர்க்கு, “அனாதியே ஆன்மாவாகிய கூட்டிலே வாழ்ந்திருக்கப்பட்ட திருவருளை விட்டு” எனவரும் பழைய உரைப்பகுதி இத்திருக்களிற்றுப்படியார் விளக்கத்துடன் இயையாமை இங்கு நோக்கத் தகுவதாகும்.

ஆன்மா செயலற நின்று சாதிக்கும் உபாயத்தை உறுதிபிறக்கும் வண்ணம் அருளிச் செய்வது அடுத்துவரும் திருக்களிற்றுப்படியாராகும்.